தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவரது 6வது திரைப்படமாக விடுதலை கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும், இவர் வெறும் 6 படங்கை மட்டுமே இயக்கியுள்ளார். ஆனாலும், 6 படங்களும் அப்படி ஒரு பிளாக்பஸ்டர் படங்கள்.
குறிப்பாக, இவர் இயக்கத்தில் வெளியான விசாரணை, அசுரன் எப்போதும் ரசிகர்களுக்கு தனிப்பிரியம். இந்த வரிசையில்தான் தற்போது இடம்பெற்றுள்ளது விடுதலை. நகைச்சுவை நடிகராக மட்டுமே நாம் பார்த்த சூரியை முதன்முறையாக கதையின் நாயகனாக காட்டி வெற்றியும் பெற்றுள்ளார் வெற்றிமாறன். சூரியை நாயகனாக காட்டுகிறோம் என்று தேவையில்லாத ஆக்ஷன் காட்சிகளை சேர்த்து, பில்டப் காட்சிகளை உருவாக்கி அவரை கதாநாயக பிம்பமாக காட்டாமல் கதையின் முக்கிய கதாபாத்திரமான குமரேசனாகவே காட்டியுள்ளார்.
இந்த படமானது நாம் எப்போதும் மறக்கக்கூடாத கடந்த கால வரலாறு என்பதை நமக்கு நன்றாக நினைவூட்டுகிறது. படத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி காவல்துறையினர் செய்யும் சித்திரவதைகள் இன்று நடக்கிறதா? என்று சிலர் கேட்டால் அன்று நடக்கவில்லையா? என்பதுதான் பதில். ஏனென்றால், எந்த துறையிலும் ஒரு சிலர் செய்யும் தவறுகள் மொத்த துறைக்கும் களங்கம் விளைவிக்கும் என்பதை காட்டிலும் மொத்த துறையும் பொறுப்பெடுக்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில் லாக்கப் விசாரணையில் உயிரிழந்த ஜெயராஜ்- பென்னிக்ஸ் மரணமே அதற்கு சான்று. விடுதலை படம் பார்க்கும்போது அவர்களின் மரணமும் ரசிகர்களுக்கு வந்துபோனது என்பதையும் மறுக்க முடியாது.
நில உரிமை, சம உரிமை, ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம், அறத்தின் வழியில் நடக்க முயற்சிக்கும் சிலரும் அதிகாரிகளின் ஆதிக்கத்தால் சந்திக்கும் சிக்கல்கள் என்று பல பிரச்சினைகளை பேசியிருக்கிறது விடுதலை. காவல்துறையின் ஆதிக்கத்தையும், அடக்குமுறையையும் காட்டியது மட்டுமின்றி காவல்துறையிலும் கடைநிலை ஊழியர்கள் சந்திக்கும் சிரமங்களையும் தெளிவாக காட்டியுள்ளார் வெற்றிமாறன்.
விடுதலை முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை காட்டிலும் விடுதலை 2ம் பாகம் தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. 15 வருடங்களாக திரைத்துறையில் இருந்தாலும் வருடத்திற்கு ஒரு படம் என்று எடுக்காமல், வருடத்திற்கும் பேசுமளவிற்கு படம் எடுத்து வரும் வெற்றிமாறனுக்கு இனி வரும் காலங்களும் வெற்றிகள் வசப்படும் என்று வாழ்த்துவோம்.
ALSO READ | மனதை ரணமாக்கும் அயோத்தி படத்தை ஏன் பார்க்க வேண்டும்? ஒரு ரசிகனின் குரல்..!