Saturday, March 25, 2023
HomeUncategorized“ஆப்கானிஸ்தான் கூட விளையாட மாட்டோம்” அதிரடியாக அறிவித்த ஆஸ்திரேலியா…! என்னப்பா நடந்தது..?

“ஆப்கானிஸ்தான் கூட விளையாட மாட்டோம்” அதிரடியாக அறிவித்த ஆஸ்திரேலியா…! என்னப்பா நடந்தது..?

கட்டுப்பாடுகள்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் அந்த நாட்டில் ஏற்கனவே ஆட்சியில் இருந்தபோது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வந்தனர். குறிப்பாக, பெண்களுக்கு எதிராக ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்து வந்தனர். தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் மீண்டும் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இது உலக நாடுகள் மத்தியில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தலிபான்கள் இன்று அந்த நாட்டு பெண்கள் அனைவரும் ஆண் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறக்கூடாது என்றும், பெண் மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். தலிபான்களின் இந்த உத்தரவிற்கு உலக நாடுகள் பலவும் கண்டனங்களையும், கவலைகளையும் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அதிரடி:

பெண்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானுடன் விளையாடவிருந்த ஒருநாள் போட்டிகளில் விளையாட மாட்டோம் என்று தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், பெண்களுக்கு சுதந்திரத்தை நசுக்கும் வகையில் தலிபான் அரசின் அறிவிப்புகளை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் மாதம் ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெறவிருந்த ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.

இன்றைய கிரிக்கெட் உலகில் ஆப்கானிஸ்தான் அணி தவிர்க்க முடியாத அணியாக வளர்ந்துள்ளது. அவர்கள் நாட்டில் பல்வேறு இன்னல்களும், சிக்கல்களும் இருந்தாலும் ஆப்கானிஸ்தான் அணி கிரிக்கெட் உலகில் தங்களது அயராத முயற்சியால் நல்ல நிலையை எட்டியிருப்பதுடன், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.

உலக நாடுகள் கவலை

ஆனால், தற்போது தலிபான்கள் மீண்டும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அவர்களது உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதால் ஆப்கானிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் வளர்ச்சியும் தடைபட்டுள்ளது. தலிபான்கள் அந்த நாட்டில் ஆட்சியை கைப்பற்றியது முதல் பெண்களின் கல்வி, விளையாட்டு, உடை போன்ற பல்வேறு விவகாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பல்கலைகழகங்களில் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பெண் மருத்துவர்களிடம் மட்டுமே சிகிச்சை பெற வேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் பெண்களின் கல்விக்காகவும், வளர்ச்சிக்காகவும் பல நாடுகளும் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் ஆப்கானிஸ்தானில் மட்டும் பெண்களுக்கு எதிராக செயல்பட்டு வருவது உலக நாடுகளையும், ஐ.நா.வையும் கவலையடைச் செய்துள்ளது.