ஓடிடி தளம் வந்த பிறகு உலகளவில் பல்வேறு அற்புதமான படைப்புகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. தமிழிலும் திரையரங்குகள் கிடைக்காத பல இயக்குனர்கள் தங்களது படைப்புகளை ஓடிடியில் வெளியிட்டு அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த 2023ம் ஆண்டின் சிறந்த படைப்பாக அயலி வந்துள்ளது என்று கூறினால் யாரும் அதை மறுக்க முடியாது.
இந்த வெப்சீரிஸில் மைதிலி கதாபாத்திரத்தில் நடித்த பெண்ணின் நடிப்பு திறமையை பாராட்டாதவர்கள் யாருமே இல்லை. மைதிலி கதாபாத்திரத்தில் நடித்த பெண் யார்? என்று உங்களுக்கு தெரியுமா? மைதிலி கதாபாத்திரத்தில் லவ்லின் சந்திரசேகர் என்ற பெண் நடித்திருப்பார். இவர் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் ஆவார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பதற்கு ஏற்றாற்போல லவ்லின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தமிழ் சினிமாவில் இன்றைய அம்மா நடிகைகளில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகளில் ஒருவர் விஜி சந்திரசேகர். 1980களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை சரிதாவின் சகோதரிதான் இந்த விஜி சந்திரசேகர்.
தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்த் தங்கையாக அறிமுகமான விஜி அதன்பின்பு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். மதயானைக் கூட்டம் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் விஜி. வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் தனது திறமையான நடிப்பால் தவிர்க்க முடியாத நடிகையாக உலா வருகிறார். அலைகள், கோலங்கள், பெண், அழகி, சந்திரகுமாரி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்து அசத்தியுள்ளார்.
விஜி – சந்திரசேகரின் மகளான லவ்லின் அயலி தொடரில் நடித்திருப்பதை பார்த்த விஜி “ வெளிநாட்டில் படித்த இவள் சாணியை வாழ்க்கையில் பக்கத்தில் கூட பார்த்திருக்க மாட்டாள். ஆனால், அயலியில் சாணியை அழகாக அள்ளிக் கொட்டும் காட்சியில் இவள் நடிப்பை பார்த்து நானே ஆச்சரியப்பட்டேன்.கிராமத்து தோற்றத்தில் நடிக்கும்போதும் பலரும் தங்களது அழகை காட்ட வேண்டும் என்று கோட்டை விட்டுவிடுவார்கள்.அவள் படம் நடிக்கிறாள், அவள் 100 விருது வாங்குகிறாள் என்பது பெருமையல்ல. வெளியில் செல்லும்போது உங்கள் மகளை எப்படி வளர்த்து உள்ளீர்கள்? என்று சொல்வதுதான் எனக்கு பெருமை”