வாட்ஸ்அப் நிறுவனம் இரண்டு ஆண்டுகள் சோதனையை நிறுத்தி பேமெண்ட் வசதியை அதிக பயனர்களுக்கு வழங்க துவங்கியது.
இந்தியாவில் வாட்ஸ்அப் பேமெண்ட் வசதி பத்து மொழிகளில் இயக்கும் வசதி கொண்டுள்ளது. புதிய வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் புதிய ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படுகிறது.
இந்தியாவில் யுபிஐ(UPI) பேமெண்ட் தளத்தை நிர்வகிக்கும் தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன்(NPCI) வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு யுபிஐ சார்ந்த பண பரிமாற்ற சேவையை வழங்க அனுமதி அளித்ததை தொடர்ந்து புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
முதற்கட்டமாக வாட்ஸ்அப் இந்தியாவில் 20 மில்லியன் பயனர்களுக்கு மட்டும் பேமெண்ட் வசதியை வழங்குகிறது. இதற்கென வாட்ஸ்அப் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி, ஆக்சிஜன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஜியோ பேமெண்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளுடன் பணியாற்றி வருவதாக தெரிவித்து உள்ளது.
வாட்ஸ்அப் பே சேவையை பயன்படுத்துவது எப்படி
வாட்ஸ்அப்பில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை அனுப்புவதை போன்றே பணத்தை அனுப்புவதும் மிகவும் எளிமமையாகவே உள்ளது. சாட் பாரில் ஷேர் பைல் ஐகானை க்ளிக் செய்தால் புதிதாக பேமெண்ட் (Payment) எனும் ஆப்ஷன் தோன்றும்.
இந்த ஷார்ட்கட் மெனுவில் பிரத்யேகமாக பேமெண்ட்ஸ் எனும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் பயனர்கள் தங்களின் பரிமாற்ற விவரங்கள், முந்தைய பரிமாற்றங்கள் மற்றும் இதர விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.
சாட் செய்வதை போன்றே இருக்கும் பேமெண்ட் வசதி தற்சமயம் பிரபலமாக இருக்கும் ஜிபே அல்லது பேடிஎம் போன்றே எளிமையாக உள்ளது.
வாட்ஸ்அப் சேவையின் பரிமாற்ற முறைகள் என்னென்ன?
முதற்கட்டமாக வாட்ஸ்அப் பே மூலம் பயனர்கள் தங்களின் காண்டாக்ட்களுக்கு மட்டும் பணம் அனுப்ப முடியும். பின் பயனர்கள் யுபிஐ முகவரியை பதிவிட்டு நேரடியாக பணம் அனுப்பும் வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
முன்னதாக மார்ச்மாத வாக்கில் பேமெண்ட்ஸ் சேவையில் கியூஆர் கோட் வசதியை வாட்ஸ்அப் அறிமுகம் செய்து இருந்தது. அதன்படி ஒவ்வொரு வாட்ஸ்அப் பே பயனருக்கும் பிரத்யேக கியூஆர் கோட் வழங்கப்படுகிறது. இதை ஸ்கேன் செய்து பணம் அனுப்பலாம்.