How to Prevent Laptop from Overheating: இன்றைய சூழலில் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் பலரும் கணினியை பயன்படுத்துகின்றனர். கொரோனா பேரிடருக்கு பிறகு லேப்டாப் எனப்படும் மடிக்கணினி பயன்பாடு அதிகரித்துவிட்டது என்றே கூறலாம். ஏனெ்னறால், பெருநிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய பணியாளர்களுக்கு வாய்ப்பு அளித்தபிறகு தங்களது பணியாளர்களுக்கு மடிக்கணினி வழங்குகிறது.
பணியாளர்கள் சிலர் சொந்தமாக மடிக்கணினி வாங்கிக்கொள்கின்றனர். மாணவர்கள், இளைஞர்கள் பலரும் சொந்தமாக இன்று மடிக்கணினி பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. செல்போன்கள் சூடாவதை போலவே மடிக்கணினிகளும் சூடாகும் பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. அதற்கு என்ன காரணம்? அதை எவ்வாறு தடுப்பது? என்பதை கீழே காணலாம்.
காரணங்கள் என்ன? தவிர்ப்பது எப்படி?
மடிக்கணினியின் முக்கியமான பாகங்கள் Chip, IC, Circuit Board ஆகும். தொடர்ச்சியாக பயன்படுத்தும்போது இவை சூடாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த வெப்பத்தை குறைப்பதற்கு சிறிய அளவிலான மோட்டார் பேன் மடிக்கணினியின் பக்கவாட்டில் அமைந்திருக்கும்.
சில நேரங்களில் இந்த மோட்டார் பேனில் தூசுக்கள் சேர்ந்து கொண்டு, சூடான காற்றை வெளியேற்றாமல் அடைத்துக் கொள்ளும். இதனால், லேப்டாப் சூடாக வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. எனவே, லேப்டாப்பை கழற்றி உள்ளே இருக்கும் தூசுக்களை துடைக்க வேண்டும். லேப்டாப் வேக்கம் கிளீனர் வாங்கியும் பயன்படுத்தி தூசுக்களை அகற்றலாம்.
ஏ.சி. அறை, கூலிங் பேட்:
ஏ.சி.அறையில் வைத்து லேப்டாப் பயன்படுத்தும்போது மடிக்கணினி சூடாவதை நாம் கட்டுப்படுத்த முடியும். அதையும் மீறி ஏ.சி. அறையில் இருந்தும் லேப்டாப் சூடானால், கண்டிப்பாக அந்த மடிக்கணினியின் சர்வீஸ் சென்டரில் கொடுத்து சரிபார்க்க வேண்டும்.
மடிக்கணியில் இருந்து சூடான காற்றை வெளியேற்ற கூலிங் பேட் பயன்படுத்தலாம். மடிக்கணினியில் உள்ள யூ.எஸ்.பி. இணைப்பில் இதை இணைத்தால் இது இயங்கும். மடிக்கணினியில் ஏராளமான சாப்ட்வேர்கள் இருந்தாலும், அதாவது லேப்டாப்பின் மெமரி பவருக்கு அதிகமாக சாப்ட்வேர்கள் இருந்தாலும் லேப்டாப் சூடாக வாய்ப்புள்ளது.
பயன்படுத்தும் முறை:
நாம் மடிக்கணினியை எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அதன் காரணமாகவும் லேப்டாப் சூடாகும். மேசையில் வைத்து பயன்படுத்தும்போது, அதன் அடியில் சூடான காற்று வெளியேற முடியாமல் போகும். இதனால், லேப்டாப் சூடாகலாம். இதற்கு மடிக்கணினியின் அடியில் காற்று சென்று வர வசதியாக, ஏதேனும் இரண்டு பொருட்களை வைத்து, அதன் மேல் லேப்டாப்பை வைத்து பயன்படுத்துங்கள்.
பகலில் வெயில் படும் இடத்தில் அமர்ந்து லேப்டாப்பை பயன்படுத்தக்கூடாது. அதுவும் லேப்டாப் சூடாவதற்கு ஒரு காரணம் ஆகும். மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து லேப்டாப் சூடாவதை தடுக்கலாம்.