இந்தியாவின் முன்னணி இ காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான ஸ்னாப்டீல் மற்றும் ஒட்டோனோமி ஐஒ இணைந்து ரோபோக்கள் மூலம் டெலிவரி செய்யும் சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளன.
பயனர்கள் ஆர்டர் செய்த பொருட்கள் அவர்களின் வீட்டிற்கு ரோபோட் மூலம் டெலிவரி செய்யப்பட்டன. டெலிவரிக்கு முன் பயண வழியிலேயே ஆர்டர் செய்யப்பட்ட பொருள் சுத்தப்படுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
ஒட்டோனோமி ஐஒ நிறுவனம் டெலிவரி பணிகளை சிறப்பாக செய்து முடிக்கும் ரோபோக்களை உருவாக்கி இருக்கிறது. இந்த ரோபோக்கள் நடைபாதையில் ஓடுவது, உள்ளூர் தெருக்களில் நடந்து சென்று அருகாமையில் உள்ள வீடுகளுக்கு டெலிவரி செய்வது போன்ற பணிகளை செய்து முடிக்கிறது.
அதிக நெரிசல் மிக்க பகுதிகளை கடந்து செல்ல இந்த ரோபோட்கள் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன. மேலும் இவை மெஷின் லெர்னிங், 3டி லிடார் வழங்கும் ஃபியூஸ் டேட்டா மற்றும் கேமரா உதவியோடு வெளிப்புற உலகை சிறப்பாக புரிந்து கொள்கிறது.
ரோபோட் பயனர் வீட்டிற்கு சென்றதும், ரோபோ காத்திருப்பதை உணர்த்தும் தகவல் பயனருக்கு அனுப்பப்படும். பின் க்யூஆர் கோட் கொண்டு பயனர்கள் ரோபோவில் இருக்கும் பிரத்யேக ஹோல்டு பகுதியை அன்லாக் செய்து, தனது பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
ஒட்டோனோமி ஐஒ நிறுவனம் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணைந்து டெலிவரி சோதனையை டெல்லி என்சிஆரில் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் மேற்கொண்டது.