சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளுக்காக பல்வேறு வசதிகளை மெட்ரோ நிர்வாகம் அவ்வப்போது ஏற்பாடு செய்து வருகிறது.
சென்னை மெட்ரோ ரயிலில் இனி வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், வாட்ஸ்அப் மூலம் இணையத்திலே டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம் என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் எடுப்பது என்பது பயணிகளுக்கு ஒரு சிரமமான காரியமாக உள்ளது. ஏற்கனவே பயண அட்டை கியூஆர் முறை உள்பட ஒரு சில வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் டிக்கெட் எடுப்பதற்காக சில மெட்ரோ நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பயணிகளின் இந்த சிரமத்தை போக்கும் வகையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் எளிமையாக பயணம் செய்ய டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்ய உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் மூலம் பயணம் செய்ய வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் எடுக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் வீட்டிலிருந்து கிளம்பும்போதே எங்கிருந்து எங்கு பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்த டிக்கெட்டை வாட்ஸ் அப் மூலம் எடுத்துக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு என தனி வாட்ஸ் அப் எண் வழங்கப்படும் என்றும் அந்த எண்ணுக்கு தங்களுடைய வாட்ஸ்அப் இருந்து ஹாய் என்ன மெசேஜ் அனுப்புவதன் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி கிடைக்கும் என்றும் சென்னை மெட்ரோ ரயிலின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் இருக்கும் நிலையில் தற்போது சென்னையில் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளதால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் விமான நிலையம் முதல் சென்ட்ரல் வரை கோயம்பேடு மார்க்கமாக ஒரு வழித்தடத்திலும், பரங்கிமலை முதல் கோயம்பேடு வழியாக சென்ட்ரல் வரையிலும், விமான நிலையம் முதல் தேனாம்பேட்டை, நந்தனம் வழியாக விம்கோ நகர் வரையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.