தொழில்நுட்ப வளர்ச்சி என்பது 2000ம் ஆண்டுக்கு பிறகு அசுர வேகத்தில் உள்ளது. 2000- காலகட்டத்தில் செல்போனில் வீடியோ கால் பேசலாம் என்று யாராவது கூறியிருந்தால் சிரித்து இருப்பார்கள். ஆனால், இன்று அது சாத்தியமாகியுள்ளது.
ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ்:
அதேபோலதான், தற்போது அனைத்து தொழில்நுட்ப விஞ்ஞானிகளும் பெரிதளவு ஆர்வம் காட்டும் ஒன்றாக AI எனப்படும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜன்ஸ் ஆகும். இந்த ஆராய்ச்சியில்தான் பல உலக நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது தொழில்நுட்ப சந்தையில் புதிய வரவாக அமைந்திருப்பது Chat GPT என்பது ஆகும். ஆனால், இதை கண்டு பலரும் அச்சப்படுகின்றனர் என்பதே உண்மை. இதற்கு காரணம் இது ஒரு AI கருவியாகும். மனிதர்களை போல இந்த கருவியும் புரிதலை கொண்டுள்ளது என்பதால் வருங்காலங்களில் மனிதர்கள் மீது இது ஆதிக்கம் செலுத்தும் என்று நிபுணர்கள் அச்சப்படுகின்றனர்.
அச்சுறுத்தலா?
இந்த கருவியானது மனிதர்கள் சில வேலைகளை செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டால், இந்த கருவியானது குறைந்த நேரத்தில் வேலையை செய்து முடித்து விடுகிறது. அதேசமயம் கூகுள் உதவியுடன் இந்த கருவியை பயன்படுத்தும்போது இந்தியா உள்பட உலக நாடுகளின் பல வேலைகளுக்கு அச்சுறுத்தலாக அமையவும் வாய்ப்புள்ளது என்கின்றனர்.
கூகுளில் இப்போது வரை பல விடை கிடைக்காத கேள்விகளுக்கு கூகுளே அதற்கு பொறுத்தமான இணைப்புகளை வழங்கும். ஆனால், இந்த கருவியை பயன்படுத்தி கடினமான கேள்விகளுக்கும் பதில்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று கருதப்படுகிறது. இதன்மூலம் நமது அன்றாட வேலைகள் பலவற்றை மிக எளிதாகவும் செய்ய முடியும். எந்தவொரு விஷயத்தை பற்றியும் விரிவான தகவல்களை பெற முடியும்.
மனிதர்கள் மீது ஆதிக்கமா?
புரியும் வகையில் சொன்னால் இந்த Chat GPT ஒரு செயற்கை நுண்ணறிவு கருவி ஆகும். இந்த கருவி மனிதனை போல சிந்திக்கும் திறன் கொண்டது என்பதால், இது இணைப்புகளை வழங்காமல் பதில்களையே கூறும் ஆற்றல் கொண்டது. அதன் காரணமாகவே நிபுணர்கள் இந்த கருவியின் பயன்பாடு குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த கருவியானது வருங்காலங்களில் மனிதர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கருதுகின்றனர்.
தற்போது வரை இந்த Chat GPT பற்றி பலரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.