Monday, March 27, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்கோலியின் இடத்தை நிரப்புவாரா ஜடேஜா? இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி பற்றிய முழு அலசல்

கோலியின் இடத்தை நிரப்புவாரா ஜடேஜா? இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி பற்றிய முழு அலசல்

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் முக்கிய பவுலர் முகமது ஷமி இல்லாத நிலையில் நாளைய போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தான், விராட் கோலி மற்றும் ஷமிக்கு மாற்று மட்டும் இல்லாமல், மேலும் சில முக்கிய மாற்றங்களும் இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது நாளைய தொடரில் இந்திய அணிக்கு பலன் கொடுக்குமா என்பதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் போட்டியில் ஆடிய பிரிதிவி ஷாக்கு பதில் ஷப்மன் கில்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விரிதிமான் சகாவுக்கு பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் களமிறங்குகிறார். இந்த நிலையில் தான் முக்கியமாக கேப்டன் விராட் கோலிக்கு பதில் ஜடேஜா நாளைய போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதுதான் இந்திய அணியின் ஆட்டத்தையே மொத்தமாக மாற்றும் என கணிக்கப்படுகிறது.

கோலியின் இடத்தை நிரப்புவாரா ஜடேஜா ?

இடதுகை ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டங்கள் சமீப காலங்களாக பெரிய அளவில் முன்னேறி இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் கோலி போன்று நிலையான ரன்களை அவர் அடிப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் கடந்த காலங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுது ஜடேஜா தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஜடேஜாவின் தேர்வில் இருக்க கூடிய மற்றொரு பலன், ஐந்தாவது பவுலிங் வாய்ப்பு. மெல்போர்ன் மைதானம் சமீப காலங்களாக ஸ்லோ பிட்சுக்கு சாதகமாக மாறியுள்ளது இதனால் அணியில் கூடுதல் ஸ்பின்னர்கள் இருப்பது விக்கெட் எடுப்பதிலும் ரன்களை கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் பலம் சேர்க்கும்.

will jadeja fulfill kohli's absence against australia?

அறிமுக வீரர் ஷப்மன் கில் :

முதல் டெஸ்ட் போட்டியில் பிரிதிவி ஷா எடுக்கப்பட்டு அவர் வழக்கம் போல சொதப்பிய போதே இரண்டாவது போட்டியில் நிச்சயம் அவருக்கு மாற்று இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பிரிதிவி ஷாவின் தொழில்நுட்ப குறைபாடு முதல் டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்தது. இதனால் இந்தியாவின் தொடக்கமே 2 இன்னிங்சிலும் மோசமாக அமைந்தது. இதனால் அவருக்கு மாற்றாக ஷப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பேட்டிங்கில் திறமையான வீரரும் கூட, அதேசமயம் ஆஸ்திரேலியாவின் இப்போதைய சூழலுக்கு பொருந்திப்போக கூடியவர். கோலி போன்ற அதிரடி பேட்ஸ்மேன் இல்லாத நிலையில் இவர் மூலம் ஒரு வலிமையான ஓப்பனிங் கொடுக்க முடியும்.

பண்ட் – சாகா போட்டி:

இந்திய அணியில் தோனியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விரிதிமான் சாகா தான் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாகா பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் படியான பங்களிப்பை கொடுக்கவில்லை. அதேநேரம் அடுத்த தோனி என புகழப்பட்ட ரிஷப் பண்ட் நிலையான ஆட்டங்களை கொடுக்க தவறியதால் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். ஆனால் பயிற்சி போட்டிகளில் பண்ட் அதிரடியாக ஆடியதால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. போன போட்டியில் இந்தியா நிதானமாக ஆடியதால் நாளைய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு ரிஷப் பண்ட் தான் சரியான தேர்வாக இருப்பார்.

முகம்மது சிராஜின் தொடக்கம் :

தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு கூட செல்ல முடியாமல் நாட்டுக்காக விளையாடுவது முக்கியம் என ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்த முகம்மது சிராஜின் கனவு நிறைவேறும் தருணம் வந்துவிட்டது. தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்க இருக்கிறார் இளம் வீரர் சிராஜ். ஷமியின் இழப்பு இந்திய அணியின் பவுலிங் தாக்குதலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரம் சரியான வழிகாட்டல் இருந்தால் சிராஜ் சரியான லென்தில் ஸ்விங் பால் வீசக்கூடியவர். முதல்தர போட்டிகளில் சைனியை விட சிராஜ் அதிக ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார். நாளை புதிய பந்தில் உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் கூட்டணியை பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்திருந்தால் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.

கே.எல்.ராகுல் நிலை என்ன ?

இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்று பின்னர் ரிஷப் பண்டின் மோசமான ஆட்டத்தால் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எனும் இடத்தை பிடித்தார் கே.எல்.ராகுல். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சந்தேகத்திற்கிடமின்றி கே.எல்.ராகுல் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் அவரை அதிகம் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இது ராகுலின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடர். பிரிதிவி ஷா ஓப்பனிங் தடுமாறிய நிலையில் அவருக்கு மாற்றாக தொடக்க வீரராகவும், விராட் கோலி இல்லாத நிலையில் மிடில் ஆர்டரிலும் கூட ராகுலை பயன்படுத்த முடியும்.

இருப்பினும் குறிப்பிட்ட ஓவர் போட்டிகளில் நல்ல பங்களிப்பை கொடுத்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இப்போது இருக்கும் நிலையில் ராகுலை பயன்படுத்துவது கொஞ்சம் ரிஸ்க் தான். வெளிநாட்டு மண்ணில் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. மிடில் ஆர்டரில் களமிறக்கினாலும் அவரால் பவுலிங் செய்யவும் முடியாது. கூடுதல் ஸ்பின் பவுலர் தேவைப்படும் இடத்தில் ஜடேஜாவை பயன்படுத்துவதே இந்திய அணிக்கும் உபயோகமாக இருக்கும்.