அவ்வளவுதான்.. இனிமே ஒன்னுமே கிடையாது.. இனி கதைக்கே ஆக மாட்டாரு… ரிட்டையர்ட் ஆக வேண்டியதுதான் என்று கடந்த இரண்டரை ஆண்டுகளாக விமர்சனங்களுக்கு மேல் விமர்சனங்களை எதிர்கொண்டார் விராட்கோலி. அப்படி பேசிய வாய்கள் எல்லாம் சச்சின் சாதனையை எப்போது விராட்கோலி முறியடிப்பார் என்று பேச ஆரம்பித்துள்ளனர்.
அதிக 150 ப்ளஸ் ரன்கள்
அந்தளவுக்கு புத்தாண்டை மீண்டும் தனது ஆதிக்கத்துடன் தொடங்கியுள்ளார் விராட்கோலி. கடைசியாக ஆடிய 4 ஒருநாள் போட்டிகளில் 3 சதங்கள். அதுவும் இன்று திருவனந்தபுரத்தில் கேரள மண்ணில் விராட்கோலி ஆடிய கதகளி இலங்கை அணியை காட்டிலும் அவரை விமர்சித்து பேசியவர்களுக்குதான் சம்மட்டி அடியாக விழுந்துள்ளது.
ரன் மெஷின் என்ற வார்த்தை இவருக்கு மட்டும்தான் பொருந்தும் என்பது போல 110 பந்துகளில் 166 ரன்களை விளாசியுள்ளார். தொடக்க வீரராக அல்லாத கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150 ரன்கள் விளாசியிருக்கார் என்றால் அது விராட்கோலி மட்டுமே. இன்றைய போட்டியில் 166 ரன்கள் விளாசியதன் காரணமாக ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக அல்லாமல் 150 ரன்களை 5வது முறையாக விராட்கோலி விளாசியுள்ளார்.
விமர்சனங்களுக்கு பதிலடி
அவருக்கு அடுத்த இடத்தில் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ் 3 முறையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். பிரையன் லாரா 2 முறை தொடக்க வீரராக அல்லாமல் 150 ரன்களை விளாசியுள்ளார். டிவிலியர்ஸ், மெக்லியாட், ஜோஸ் பட்லர் ஆகியோரும் தலா 2 முறை தொடக்க வீரராக அல்லாமல் ஒருநாள் போட்டியில் 150 ரன்களை விளாசியுள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர்கூட விராட்கோலி அளவிற்கு விமர்சனங்களை எதிர்கொண்டிருக்க மாட்டார். விராட்கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதமடிக்காவிட்டாலும், அரைசதங்களை அவ்வப்போது விளாசிக் கொண்டே வந்தார். ஆனால், விமர்சகர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் இவர் இளம் வீரர்களுக்கு வழி விட வேண்டும் என்றெல்லாம் நச்சரிக்கத் தொடங்கினர்.
ராஜநடை
அத்தனை விமர்சனங்களையும் கடந்து மீண்டும் தனது ராஜநடை போடத் தொடங்கியுள்ள விராட்கோலி இல்லாமல் இந்திய அணி ஒருநாள் உலகக்கோப்பையில் பங்கேற்க முடியாது என்பது தற்போதே உறுதியாகியுள்ளது.