உலக கிரிக்கெட் அரங்கில் மீண்டும் சென்சேஷனல் செய்தியாக மாறியிருக்கிறார் விராட்கோலி. உண்மையிலே கம்பேக் என்று வார்த்தைக்கு மிகச்சிறந்த உதாரணம் விராட்கோலி என்றே சொல்லலாம். கோலி இரண்டரை ஆண்டுகளாக பட்ட சிரமங்களுக்கு மற்ற வீரராக இருந்தால், கிரிக்கெட்டில் இருந்தே காணாமல் போயிருப்பார்கள். ஆனால், திடமான நம்பிக்கையுடன் களத்தில் நின்று போராடி இன்று மீண்டும் தனது சாதனை பயணத்தை மட்டுமின்றி சத பயணத்தையும் தொடர்ந்துள்ளார்.
அதுவும் இன்று இலங்கை அணிக்கு எதிராக அவர் அடித்த 166 ரன்கள் “வந்துட்டேனு சொல்லு…. நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு” ரக சதம் ஆகும். ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்றால் எப்படி பேட் செய்ய வேண்டும் என்று அத்தனை நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்குமே விராட்கோலி பாடமே எடுத்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு மைதானம், ஒவ்வொரு அணி என்று ராசியானதாக இருக்கும். ஆனால், நமது விராட்கோலிக்கு பொங்கல் பண்டிகை என்றால் மிகவும் ராசியானதாக அமைந்துள்ளது. பொங்கல் வந்துவிட்டாலே விராட்கோலிக்கு குஷி என்றே சொல்லலாம். விராட்கோலி இதுவரை பொங்கல் பண்டிகையில் மட்டும் அதாவது ஜனவரி 15-ந் தேதி மட்டும் 4 ஒருநாள் சதங்களை விளாசியுள்ளார்.
2017ம் ஆண்டு ஜனவரி 15:
2017ம் ஆண்டு இந்தியா வந்திருந்த இங்கிலாந்து அணிக்கு எதிராக 351 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ராகுல் – தவான் சொதப்ப நங்கூரம் போல நின்ற விராட்கோலி 122 ரன்கள் விளாசி வெற்றிக்கு வழிவகுத்தார். அந்த போட்டியில் கேதர் ஜாதவும் 120 ரன்களை 76 பந்துகளில் விளாசியதும் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
2018ம் ஆண்டு ஜனவரி 15:
2018ம் ஆண்டு ஜனவரி 13ந் தேதி செஞ்சுரியன் மைதானத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் டெஸ்ட் போட்டியில் மோதின. முதல் இன்னிங்சில் தெ.ஆப்பிரிக்கா 335 ரன்கள் குவிக்க இந்தியாவின் தொடக்க வீரர்கள் முரளி விஜய் 46 ரன்களுக்கும், கே.எல்.ராகுல் 10 ரன்களுக்கும் புஜாரா டக் அவுட்டாகியும் வெளியேற விராட்கோலி மட்டும் தனி ஆளாக போராடி அணியை 300 ரன்களை கடக்க வைத்தார். தனி ஆளாக போராடிய விராட்கோலி அந்த இன்னிங்சில் 153 ரன்களை குவித்தார். அவர் சதமடித்தது ஜனவரி 15-ந் தேதி ஆகும். ஆனால், அந்த போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
2019ம் ஆண்டு ஜனவரி 15:
விராட்கோலிக்கு ஆஸ்திரேலியா என்றாலே சொல்லவே தேவையில்லை. 2019ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய இந்திய அணிக்கு 299 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 47 ரன்களை இந்தியா எட்டியபோது களமிறங்கிய விராட்கோலி அற்புதமாக இந்திய அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றார். அவரது அபாரமான சதத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட்கோலி அந்த போட்டியில் 104 ரன்களை விளாசியிருந்தார்.
2023 ஜனவரி 15:
தைத்திருநாளாம் இன்றைய பொங்கல் பண்டிகையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் விராட்கோலி இலங்கை அணிக்கு எதிராக ருத்ரதாண்டவம் ஆடினார். அவர் 110 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 166 ரன்கள் விளாசி பொங்கல் பண்டிகை என்றாலே அது தன்னுடைய நாள் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த பொங்கல் துணிவு பொங்கலா..? வாரிசு பொங்கலா..? என்று இணையத்தில் சண்டையிட்டுக் கொள்ளும் நேரத்தில் இந்த பொங்கல் கோலி பொங்கல் என்று விராட் அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்.