இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை கிண்டல் செய்யும் ஒரு மீம்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ் லைக் போட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அடுத்த சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். தொடர்ந்து 3 ஐபிஎல் சீசன்களில் இவர் தன்னுடைய திறமையை நிரூபித்திருந்தாலும் இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இந்த சீசனிலும் இவருடைய நிலையான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால் இப்போதும் சூர்யகுமார் யாதவ்க்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது சர்ச்சையானது. இதனால் கேப்டன் கோலி அவரை புறக்கணிக்கிறார் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்தனர்.
இதற்கிடையே மும்பை மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியின் போது விராட் கோலியை பார்த்து சூர்யகுமார் யாதவ் முறைத்ததும் அதற்கு கோலி அவரை ஸ்லெட்ஜிங் செய்ய முற்பட்டதும் இறுதியில் போட்டியின் முடிவில் சூர்யகுமார் யாதவ் கொடுத்த பதிலும் பெரிய அளவில் வைரலானது. அப்போதே இவர்கள் இருவருக்கும் இடையிலான மோதல் போட்டியின் போதே வெளியில் தெரிந்து விட்டதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் இப்போது அடுத்த சர்ச்சை எழுந்துள்ளது.
Throw me to the wolves and I come back leading the pack – @ImRo45 #Master pic.twitter.com/du5e7LEo74
— Rohit Selva Rfc ᴹᵃˢᵗᵉʳ (@imselva03) November 15, 2020
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் ரவுடிகளுக்கு முன்பு விஜய் நிற்பது போல் வரும் ஒரு சீனை வைத்து ரவுடிகளில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் அனைவரும் நிற்பது போன்றும், விஜயின் இடத்தில் ரோஹித் சர்மா இவர்களை எதிர்த்து நிற்பது போலவும் தயார் செய்யப்பட்ட ஒரு மீம்க்கு சூர்யகுமார் யாதவ் லைக் போட்டிருக்கிறார். அவ்வளவு தான், உடனடியாக கோலி ரசிகர்கள் டிவிட்டரில் கொந்தளிக்க தொடங்கியுள்ளனர். இந்திய அணியில் இடம் கிடைக்கும் முன்பே இவ்வளவு தலைக்கனம் இருந்தால் இவருக்கு எல்லாம் எப்படி அணியில் இடம் கிடைக்கும் என்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இதற்கிடையே அந்த மீம் போஸ்டுக்கு போட்ட லைக்கை உடனடியாக சூர்யகுமார் யாதவ் அன்லைக் செய்துவிட்டார்.