டெல்லி : கிரிக்கெட் வீரர்களுக்கு தொடர்ந்து தலையில் அடிபடுவதற்கான காரணம் குறித்து விளக்கியுள்ளார் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர். இந்தியா- ஆஸ்திரேலியா தொடரில் வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து வரும் நிலையில் கவாஸ்கரின் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடரின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டு மூளை அழற்சி ஏற்பட்டது. அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த ஜடேஜா, மிச்செல் ஸ்டார்க்கின் பவுன்சர் பந்தை எதிர்கொள்ளும் போது தலையில் பலமாக அடிபட்டது. ஜடேஜா அப்போது ஹெல்மெட் அணிந்திருந்ததால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் அவர் சோர்வடையவே உடனடியாக மாற்று வீரர் சாஹல் களமிறக்கப்பட்டு ஜடேஜாவை ஸ்கேன் எடுக்க கொண்டு சென்றனர். அதன் பின்னர் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்று கண்டறியப்பட்டு ஜடேஜாவுக்கு தொடரில் இருந்து ஒய்வு கொடுக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின் போது, இந்திய வீரர் கார்த்திக் தியாகி வீசிய பவுன்சர் பந்து ஆஸ்திரேலியாவின் வில் புக்கோவ்ஸ்கி தலையில் பட்டு அவருக்கும் மூளை அழற்சி ஏற்பட்டதையடுத்து டெஸ்ட் தொடரில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். அவருக்கு தலையில் அடிபடுவது இது முதல் முறை கிடையாது இதுவரை மொத்தம் 9 முறை அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதனால் அவர் மிகவும் கவனமாக விளையாட வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதே போல இதே பயிற்சி போட்டியின் போது ஹாரி கான்வாய் என்பவருக்கும் தலையில் அடிபட்டுள்ளது ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இப்படி வீரர்களுக்கு தொடர்ந்து தலையில் அடிபடுவது சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் பேசியுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் வலிமை வாய்ந்த பவுலர்கள் இருந்த காலகட்டத்திலேயே பல போட்டிகள் ஹெல்மெட் இல்லாமல் விளையாடிய அனுபவம் உள்ளவர் கவாஸ்கர். அவர் இதுகுறித்து கூறும்பொழுது, பேட்ஸ்மேன்கள் பவுன்சர் பந்துகளை அதிகமாக முன்னோக்கி சென்று எதிர்கொள்ள முயற்சிப்பதே இப்படி அடிபடுவதற்கு காரணமாக குறிப்பிட்டுள்ளார். இப்போதைய பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் ஃபிரண்ட் ஃபுட் ஆடி வருகின்றனர். இதனால் பந்தை முன்னோக்கி வந்து எதிர்கொள்கின்றனர். ஆனால் இது கொஞ்சம் கடினமானது. அதனால் தான் பந்து அதிகம் பவுன்சர் ஆகும் பிட்சுகளில் பேட்ஸ்மேன்கள் தடுமாறுகின்றனர் என்றார்.
ஆஸ்திரேலியாவில் பின்னோக்கி தான் விளையாட வேண்டும்:
ஆஸ்திரேலியாவில் பிட்சுக்கள் பெரும்பாலும் ஷார்ட் பந்துகளுக்கு ஏற்றதாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும், அங்கு நீங்கள் பவுன்சரை எதிர்கொள்ள விரும்பினால் பேக் ஃபுட் ஆட வேண்டும். நீங்கள் பின்னோக்கி சென்று விளையாடும் போது பவுன்சரை எளிதாக சமாளிக்க முடியும். ஆனால் பெரும்பான்மையானோர் அதை செய்வது கிடையாது. ஒரு பேட்ஸ்மேனாக பவுன்சரை அப்படி எதிர்கொள்ளும் போது கொஞ்சம் மாட்டிக்கொள்ள வாய்ப்புள்ளது. ஷார்ட் பந்துகளை பின்னோக்கி எதிர்கொள்வதே விளையாடுவதற்கான வழி என்றும் கவாஸ்கர் தனியார் நிகழ்ச்சியில் பேசும் பொழுது கூறினார்.
விராட் கோலியை பாருங்கள் அவர் பவுன்சர் பந்துகளை எளிதாக எதிர்கொள்வார். ஏன் அவர் அந்த பந்துகளில் தடுமாறுவது கிடையாது? ஏனென்றால் விராட் கோலி முன் மற்றும் பின்னோக்கியும் விளையாடுவார். ராகுல் டிராவிட் பின் காலில் தான் பெரும்பாலும் பந்தை எதிர்கொள்ள காத்திருப்பார். சச்சின் டெண்டுல்கர் சில நேரம் ஃபிரண்ட் ஃபுட் ஆடுவார், ஆனால் அது மிக குறைந்த அளவிலேயே இருக்கும். எனவே அவரும் ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ளும் போது சமநிலையில் இருப்பார் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு சிறிய தொழில்நுட்ப விஷயம், இந்த வீரர்களின் ஹெல்மெட் மீது அடிபடுவதற்கான காரணமும் இதுதான். பெரும்பாலான நேரங்களில் பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட் மீது அடிபடுவது கிரீஸ் லைனுக்கு இடைப்பட்ட பகுதியில் தான் நடக்கும். அவர்களுடைய முன்கால் கிரீஸ் லைனுக்கு வெளியேயும், பின்கால் கோட்டுக்கு உள்ளேயும் இருக்கும். பேட்ஸ்மேனின் இரண்டு கால்களும் கிரீஸ் லைனுக்கு உள்ளே ஸ்டம்பிற்கு அருகே இருந்து அடிபடுவதை எப்போதாவது தான் பார்க்க முடியும். ஏனெனில் அவர்கள் உள்ளே நிற்கும் பொழுது அவர்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும், இதனால் பவுன்சர் பந்தை எதிர்கொள்ளவும் போதுமான அளவு இடைவெளி கிடைக்கும். ஆனால் பெரும்பாலும் அது நடப்பதில்லை. அதனாலேயே அவர்கள் பாதிக்கப்படுவதாக நான் நினைக்கிறன் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.