Monday, March 27, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்சச்சினுக்கு அடுத்து ஸ்மித்துதான்.. ஒரு சதத்தில் இத்தனை சாதனைகளா.. அம்மாடியோவ்!

சச்சினுக்கு அடுத்து ஸ்மித்துதான்.. ஒரு சதத்தில் இத்தனை சாதனைகளா.. அம்மாடியோவ்!

நிகழ்கால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஜாம்பவான் பட்டியலில் எப்போதும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு தனி இடம் உண்டு. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக அசத்திய அவர், பெருத்த சர்ச்சைக்கு பிறகு தடை விதிக்கப்பட்டு மீண்டும் அணிக்குள் திரும்பி தற்போது சாதனை மேல் சாதனை படைத்து வருகிறார்.

தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் சதமடித்து அசத்தியுள்ளார். இது அவருடைய 30வது சதம் ஆகும். ஸ்டீவ் ஸ்மித் தன்னுடைய 162வது டெஸ்ட் இன்னிங்சில் இந்த சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 30 சதங்களை அடித்த வீரர் என்ற பெருமை சச்சின் டெண்டுல்கர் வசமே உள்ளது. அவர் தன்னுடைய 159வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார்.

மேத்யூ ஹைடன் தன்னுடைய 167வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார். ரிக்கி பாண்டிங் 170வது இன்னிங்சில் இந்த சாதனையை படைத்தார். சுனில் கவாஸ்கர் 174வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினார்.

ஆஸ்திரேலிய வீரராக ரிக்கிபாண்டிங், ஸ்டீவ் வாக் மற்றும் ஹைடனுக்கு பிறகு 30 சதங்களை விளாசிய வீரர் என்ற சாதனையை ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்வது எப்போதும் அவ்வளவு எளிதான விஷயமாக பந்துவீச்சாளர்களுக்கு அமைவதே கிடையாது.

இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சை துவம்சம் செய்த ஸ்டீவ் ஸ்மித் 151 பந்துகளில் 13 பவுண்டரியும் 104 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மேலும், இந்த போட்டியில் சதமடித்த ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் கிளார்க் மற்றும் ஹைடனை பின்னுக்குத் தள்ளினார். ஸ்டீவ் ஸ்மித் இன்றைய போட்டியில் 104 ரன்களில் ஆட்டமிழந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8647 ரன்களை எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 22வது வீரர் ஆவார்.

பல சாதனைகளை அடுத்தடுத்து குவித்து வரும் ஸ்டீவ் ஸ்மித்திற்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.