இஸ்லாமாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டு பிளசிஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் பெஷாவர் ஸல்மி அணிக்காக விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர்கள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டன. பெரும்பாலான அணிகளின் லீக் போட்டிகள் முடிவடைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த அணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இதனால் மற்ற வெளிநாட்டு வீரர்கள் பிற நாடுகளில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளனர். சில வீரர்கள் பிக் பாஷ் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தான் சென்னை அணியில் பங்கேற்ற தென் ஆப்ரிக்க வீரரான டு பிளசிஸ் பாகிஸ்தானில் நடைபெறும் உள்ளூர் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடர்களுக்கு போட்டியாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அதன் படி இந்தாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் மார்ச் மாதம் தொடங்கி பின்னர் கொரோனா வைரஸ் காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகள் நவம்பர் 14 முதல் 17 வரை நடைபெற உள்ளது. இதில் விளையாடும் 21 வெளிநாட்டு வீரர்களில் தற்போது டு பிளசிஸ் இணைந்துள்ளார். பிஎஸ்எல் போட்டிகளில் முதல் முறையாக விளையாட உள்ள இவர் பெஷாவர் ஸல்மி அணிக்காக விளையாட இருக்கிறார்.
பெஷாவர் அணியில் இணைந்து விளையாட தாம் ஆர்வமாக இருப்பதாக டு பிளசிஸ் கூறியுள்ளார். கடைசியாக 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி உலக லெவன் அணிகளின் டி20 போட்டிகளுக்காக பாகிஸ்தானில் விளையாடியது எனக்கு மிகவும் பிடித்த நினைவுகளாக மாறியது. இப்போது கொரோனாவுக்கு மத்தியில் விளையாட இருக்கும் இந்த அனுபவமும் நிச்சயம் மறக்க முடியாததாக மாறும் என்றும் அவர் கூறியுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் வீரரான போலார்டின் இடத்தை டு பிளசிஸ் நிரப்புவார் என்று கூறப்பட்டுள்ளது. இவர் தவிர இம்ரான் தாஹிர் உட்பட 6 தென் ஆப்ரிக்க வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்று விளையாட உள்ளனர்.