இன்றைய நவீன கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ரன்களை குவிப்பது என்பது சர்வசாதாரணமான ஒன்றாக மாறியுள்ளது. குறிப்பாக, இந்திய வீரர்களுக்கு இரட்டை சதம் அடிப்பது என்பது அல்வா போல மாறிவிட்டது. நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இன்று தொடங்கிய நிலையில், அனைவரது கவனமும் விராட்கோலி மீது இருந்தது.
இலங்கை அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்த சுப்மன்கில் பற்றி யாரும் யோசிக்கவில்லை. ஆனால், இந்திய அணியின் வருங்காலம் நான்தான் என்பது போல இன்று சுப்மன்கில் ஆடி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். நியூசிலாந்து போன்ற பலமான அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இந்த சாதனை மூலம் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற அபாரமான சாதனையை சுப்மன்கில் படைத்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் 200 ரன்களை அடித்த மிக இளம்வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். சுப்மன்கில் தன்னுடைய 23 வயது 132 நாட்களிலே இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை இஷான்கிஷான் கடந்தாண்டு இறுதியில் படைத்திருந்தார்.
இஷான்கிஷான் வங்காளதேச அணிக்கு எதிராக தன்னுடைய இரட்டை சதத்தை 24 வயது 145 நாட்களில் விளாசினார். அவரது சாதனையை சுமார் மூன்று மாதங்களுக்குள்ளே சுப்மன்கில் முறியடித்துள்ளார். மேலும், ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையையும் சுப்மன்கில் படைத்துள்ளார். சர்வதேச அளவில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை ஒருநாள் போட்டியில் எட்டிய 2வது வீரர் ஆவார். பாகிஸ்தானின் பக்கர் ஜமான் 18 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டிய வீரராக உள்ளார். விராட்கோலி மற்றும் ஷிகர்தவான் இருவரும் 24 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டினர்.
தொடக்க வீரர்கள் இருவருக்கு இடையே மிகப்பெரிய ரன் வித்தியாசம் கொண்ட போட்டியில் இரண்டாவது இடத்தில் இந்த போட்டி அமைந்துள்ளது. அதாவது தொடக்க வீரர் ரோகித்சர்மா 34 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சுப்மன்கில் 208 ரன்கள் எடுத்துள்ளார். இருவருக்கும் இடையே 174 ரன்கள் வித்தியாசமாக அமைந்துள்ளது. முதலிடத்தில் ரோகித்சர்மா 264 ரன்கள் எடுத்த போட்டியில் அவருடன் ஆட்டத்தை தொடங்கிய விராட்கோலி 66 ரன்கள் விளாசியிருந்தார். இருவருக்கும் இடையே 198 ரன்கள் வித்தியாசம் உளளது.