Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்மீண்டும் எழுந்த விவாதம்.. கேப்டன் பதவி பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.. அக்தர் திடீர் கருத்து

மீண்டும் எழுந்த விவாதம்.. கேப்டன் பதவி பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும்.. அக்தர் திடீர் கருத்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் இந்திய அணியில் கேப்டன் பதவி பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்கிற புதிய விவாதத்தை எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறிய போதே இந்திய அணியில் கேப்டன் பதவி விராட் கோலிக்கு பதில் ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட வேண்டும் என்கிற பேச்சு பரவலாக எழுந்தது. ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல் விராட் கோலி இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். இப்போது ஐந்தாவது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்ற உடன் மீண்டும் அதுகுறித்த விவாதம் எழுந்துள்ளது.

ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதுவே அவருடைய கேப்டன் தகுதிக்கு சான்று, குறைந்தது இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியாது அவரிடம் கொடுக்கப்பட வேண்டும் என்று பல ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கூறி வந்தனர். இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூட இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்படவில்லை என்றால் அது வெட்கக்கேடானது என்றும் கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா நன்றாக ஆடினால் இந்திய அணியின் கேப்டன் பதவியை நிச்சயம் பகிர்ந்து கொடுக்கப்பட வேண்டும் என்கிற கருத்தை மறுக்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. ஆனால் முதலில் இந்த மூன்று அணியிலும் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. அதன்பின்னர் டெஸ்ட் அணியில் மட்டும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் விடுப்பு எடுக்க உள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்றால் அவர் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரிக்கும்.

இதுகுறித்து அக்தர் கூறும்பொழுது, கூடுதல் சுமை காரணமாக சோர்வடைந்து வருவதாக உணர்ந்தால், விராட் கோலி குறைந்தபட்சம் டி20 கேப்டன் பதவியை ரோஹித் சர்மாவிடம் வழங்குவது பற்றி சிந்திக்க வேண்டும். எனக்கு தெரிந்து விராட் கோலி அணியை முன்னோக்கி அழைத்து செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறார் என்றார். இது எல்லாம் அவர் எவ்வளவு சோர்வாக இருக்கிறார் என்பதை பொறுத்து. 2010ல் இருந்து விராட் கோலி இடைவிடாமல் ஆடி வருகிறார். ஐபிஎல் சமயத்தில் அவர் முகத்தில் இருந்த சோர்வை என்னால் பார்க்க முடிந்தது. ஒருவேளை அது பயோ பபுள் கட்டுப்பாடு காரணமாக கூட இருக்கலாம்.

இந்தியா தயாரித்த மிகப் பெரிய பேட்ஸ்மேன்களில் ரோஹித் சர்மாவும் ஒருவர். எப்போதோ அவர் கேப்டனாக தயாராகிவிட்டார். தன்னை நிரூபிக்க ஆஸ்திரேலியா தொடர் அவருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும். அவர் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அணியை வழிநடத்தும் திறமையும் திறமையும் அவருக்கு உண்டு. இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் கேப்டன் பதவியை பகிர்ந்து கொடுப்பது குறித்த விவாதம் எழும் என்றும் அக்தர் கூறியுள்ளார்.