Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்70 சதவிகிதம் தான் ஃபிட்.. ரோஹித் சர்மா காயம் குறித்து கங்குலி கொடுத்த அப்டேட்

70 சதவிகிதம் தான் ஃபிட்.. ரோஹித் சர்மா காயம் குறித்து கங்குலி கொடுத்த அப்டேட்

இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் ஷர்மா 70 சதவிகிதம் தான் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியுள்ளார். இதனால் ரோஹித் சர்மா இந்திய அணியில் இணைவது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது .

கொரோனா வைரஸ் பாதிப்பினால் நீண்ட காலமாக விளையாடாமல் இருந்த கிரிக்கெட் வீரர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐபிஎல் தொடர்களில் பங்கேற்றனர். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்ற நிறைய வீரர்கள் காயம் காரணமாக பாதியிலேயே தொடரில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் தொடரின் இடையில் காயம் ஏற்பட்டது. இதனால் 4 போட்டிகளில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் பொல்லார்டு மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டார்.

இதற்கிடையே ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. அதில் எந்த தொடரிலும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் துணைக்கேப்டன் பதவியும் கே.எல்.ராகுலுக்கு வழங்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. ரோஹித் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகவும் பலரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதற்கிடையே காயத்தில் இருந்து மீண்டு வந்த ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி தான் முழு பார்மில் இருப்பதை உறுதி செய்தார்.

இதனால் ரோஹித் சர்மா மீண்டும் இந்திய அணியில் அணைத்து போட்டிகளிலும் இணைவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி கருத்து கூறியுள்ளார். அதில் ரோஹித் இன்னும் 70 சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறார். அதனால் தான் அவர் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் சேர்க்கப்படவில்லை. அவர் உடற்பயிற்சி சோதனைக்கு உட்படுத்தப்படுவார், அதில் தேர்ச்சி அடைந்த பின்பு அவர் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்வார் என்றார்.

அதே நேரம் காயம் காரணமாக கடைசி போட்டியில் பங்கேற்காமல் இருந்த சாஹா டெஸ்ட் போட்டியில் பங்கேற்க அவர் தகுதியாக இருக்கிறார் . ஆனால் குறுகிய ஓவர் போட்டிகளுக்கு தகுதியாக இல்லை. காயம் காரணமாக முந்தைய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை சஹா இழக்க நேரிட்டது என்றும் கங்குலி கூறினார்