அணி நிர்வாகம் எந்த இடத்தில் களமிறங்கி பேட்டிங் செய்ய சொன்னாலும் மகிழ்ச்சியுடன் விளையாடுவேன் என்று இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகை ஆட்டிப்படைக்க தொடங்கிய பின்னர் சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் சர்வதேச தொடர் என்பதால் இந்த தொடர் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இதற்கிடையே முதலில் நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் கலந்துகொள்ளும் கேப்டன் விராட் கோலி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்க உள்ளார். அதன் பின்னர் தன்னுடைய மனைவிக்கு குழந்தை பிறப்பையொட்டி நாடு திரும்ப இருக்கிறார். இதனால் மீதமுள்ள டெஸ்ட் போட்டிகள் இந்தியாவுக்கு சவாலானதாக பார்க்கப்படுகிறது.
ஆனால் விராட் கோலியின் இடத்தை ரஹானே மற்றும் புஜாராவுடன் இணைந்து ரோஹித் சர்மா நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெஸ்ட் தொடர்களில் ரோஹித் சர்மாவுக்கு ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புக்கள் கொடுக்கப்படவில்லை. அதன்பின்னர் கொடுத்த வைப்புகளிலும் அவரை தொடக்க வீரராக களமிறக்கவில்லை. கடைசியாக சில தொடர்களில் தான் ரோஹித் தொடக்க வீரராக களமிறங்கி தன்னை நிரூபிக்கவும் அதுவே டெஸ்ட் போட்டிகளிலும் அவருடைய நிரந்தர இடமாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தான் இதுகுறித்து ரோஹித் சர்மா கருத்து கூறியுள்ளார்.
ரோஹித் சர்மா கொடுத்துள்ள பேட்டியில், நான் எல்லோரிடமும் சொன்ன அதே விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்வேன். அணி நிர்வாகம் எங்கு என்னை பேட்டிங் செய்ய சொன்னாலும் மகிழ்ச்சியோடு விளையாடுவேன், ஆனால் தொடக்க வீரரான என்னுடைய இடத்தை அவர்கள் மற்றம் செய்வார்களா என்பது எனக்கு தெரியாது என்றார். கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய பயிற்சியை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா சென்று சேரும் முன் அணி நிர்வாகம் தன்னுடைய பேட்டிங் பங்களிப்பு குறித்து கண்டுபிடித்திற்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே சென்று இருக்கும் வீரர்கள், விராட் கோலி வெளியேறும் சமயத்தில் வேறு என்னென்ன வழிகள் உள்ளது, யார் மாற்று வீரர் யார் தொடக்க வீரராக களமிறங்குவார்கள் என்பதையெல்லாம் இந்நேரம் கண்டுபிடித்திருப்பர் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நான் அங்கு சென்றதும், என்ன நடக்கப் போகிறது என்பது பற்றிய தெளிவான யோசனை எனக்கு கிடைக்கும். அவர்கள் எங்கு பேட்டிங் செய்ய சொன்னாலும் எனக்கு அதில் சம்மதமே என்றும் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.