அபுதாபி : இந்த வருட ஐபிஎல் சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ளது.
2020 ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை எட்டியும் எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமலேயே இருந்து வந்தது. முதல் பாதியில் மோசமாக ஆடிய அணிகள் கூட இரண்டாம் பாதியில் அதிரடி காட்ட தொடங்கியுள்ளன. இதனால் எந்த அணிகளிலும் தகுதிபெற முடியவில்லை. இந்த நிலையில் தான் நேற்று ஐபிஎல் தொடரின் 48 வது போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் மோதின. புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் இந்த அணிகளில் யார் வெற்றி பெற்றாலும் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற முடியும் என்பதால் இரண்டு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக பார்க்கப்பட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார். அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியில் பின்ச்க்கு பதில் ஜோஷ் பிலிப் தொடக்க வீரராக பேட்டிங் செய்ய வந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் இருவரும் இணைந்து பெங்களூர் அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தனர். பிலிப் 33 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் யாரும் நிலையான ஆட்டத்தை கொடுக்காததால் பெங்களூர் அணி தடுமாற தொடங்கியது. கோலி, டி வில்லியர்ஸ் என அணைத்து வீரர்களும் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். படிக்கல் மட்டுமே 45 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. 165 என்கிற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியும் தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட மும்பை அணி சரிவில் இருந்து மீண்டு வந்தது. தன்னை இந்திய அணியில் எடுக்காத கோபமோ என்னவோ பெங்களூர் அணிக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடினார். 43 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து இறுதி வரை களத்தில் நின்றார். இதனால் பெங்களூர் அணி 19.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2020 ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக மும்பை மாறியுள்ளது.
இப்போது மீதமுள்ள மூன்று இடங்களுக்கு டெல்லி, பெங்களூர், பஞ்சாப், கொல்கத்தா, ஹைதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் 1 போட்டியில் வெற்றி பெற்றாலே போதும் தகுதி பெற்று விட முடியும். ஆனால் அதுவும் எளிதானது கிடையாது. ஏனெனில் டெல்லி அடுத்து விளையாட இருக்கும் இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் மற்றும் மும்பை அணிகளை எதிர்கொள்கிறது. இதில் பெங்களூர் அணி கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் எனும் கட்டாயத்தில் விளையாடும் மும்பையும் வலிமையான அணியாக உள்ளது. மறுபக்கம் பஞ்சாப் கொல்கத்தா உள்ளிட்ட அணிகளும் சர்ப்ரைஸ் கொடுத்து வருவதால் இனிவரும் போட்டிகளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.