Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஐந்தாவது முறை சாம்பியன்.. டெல்லியை வீழ்த்தி சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

ஐந்தாவது முறை சாம்பியன்.. டெல்லியை வீழ்த்தி சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்

துபாய் : டெல்லி கேபிட்டல்ஸ்க்கு எதிரான ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று ஐந்தாம் முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றுள்ளது

2020 ஐபிஎல் தொடர் ஒருவழியாக முடிவடைந்துள்ளது. பல எதிர்பார்ப்பு, ஏமாற்றங்கள், திருப்பங்களுடன் இந்த தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. துபாயில் நடைபெற்ற இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். இன்றைய போட்டியிலும் டெல்லி அணியில் பிரிதிவி ஷா சேர்க்கப்படவில்லை. ஆனால் அவருக்கு மாற்றாக ஓப்பனிங் களமிறங்கிய ஸ்டோய்னிஸ் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் கொடுத்தார்.

மும்பை அணியில் இறுதி போட்டியில் முக்கியமான ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அந்த அணியின் முக்கிய ஸ்பின் பவுலர் ராகுல் சாஹருக்கு பதில் ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டிருந்தார். முக்கியமான போட்டியில் டெல்லி அணியின் முக்கிய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விக்கெட்டுக்காகவே ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது. எதிர்பார்த்தது போலவே நான்காவது ஓவரிலேயே தவானின் விக்கெட்டை ஜெயந்த் யாதவ் கைப்பற்றினார். முதல் மூன்று ஓவர்கள் முடிவிலேயே டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் டெல்லி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் பார்மை இழந்து தவித்த ரிஷப் பண்ட் முக்கியமான இந்த போட்டியில் அணிக்கு கை கொடுத்தார். பண்ட் 38 பந்துகளில் 56 ரன்களும் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 50 பந்துகளில் 66 ரன்களும் எடுத்தனர். இவர்களை தவிர டெல்லி அணியில் மற்ற அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட தொடங்கினர். காயத்தில் இருந்து மீண்டு வந்த கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு போட்டிகளில் தடுமாறிய நிலையில் இந்த போட்டியில் அதிரடியான கம்பேக் கொடுத்திருக்கிறார். 51 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடக்கம். இந்த போட்டியில் ரபடா, நொர்ஜே, ஸ்டோய்னிஸ் உள்ளிட்ட டெல்லியின் முக்கிய பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனால் டெல்லி அணி 18.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து இறுதி போட்டியில் வெற்றி பெற்றது, இதன்மூலம் ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி மும்பை அணி சாதனை படைத்துள்ளது.