Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்.. சண்டேவை சூப்பர் சண்டேயாக மாற்றிய ஐபிஎல் போட்டிகள்

ஒரே நாளில் மூன்று சூப்பர் ஓவர்.. சண்டேவை சூப்பர் சண்டேயாக மாற்றிய ஐபிஎல் போட்டிகள்

துபாய்: மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது 2 சூப்பர் ஓவர்கள் வரை போட்டி சென்றது ரசிகர்களுக்கு உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு முந்தைய கொல்கத்தா – ஹைதராபாத் அணிகளுக்கும் இடையிலான போட்டியும் சூப்பர் ஓவர் வரை சென்றதும் குறிப்பிடத்தக்கது.

2020 ஐபிஎல் பெரிய எதிர்பார்ப்போடு நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் எந்த அணியும் கணிக்க முடியாத நிலையிலேயே உள்ளது. சென்னை பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட அதே வேளையில் பெங்களூர், டெல்லி அணிகள் முன்னிலையில் உள்ளன. பஞ்சாப் அணி பட்டியலில் கடைசி இடத்தில இருந்தாலும் நேற்றைய போட்டியில் வலுவான மும்பை அணியை மிரள வைத்து விட்டது.

நேற்று சூப்பர் ஞாயிறு என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. அபுதாபியில் நடைபெற்ற முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் ஹைதராபாத் அணி சேஸிங்கில் கடைசி நேரத்தில் அதிரடி காட்ட போட்டி டை ஆனது. இரண்டு அணிகளும் 163 ரன்கள் எடுக்க போட்டி சூப்பர் ஓவரை நோக்கி சென்றது. சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணியின் பெர்குசன் பந்துவீச்சில் ஹைதராபாத் அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்து. பின்னர் கொல்கத்தா அணி 3 ரன்கள் எடுத்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

பின்னர் துபாயில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி தொடக்கத்தில் சாதாரணமாக சென்றாலும் முடிவில் சூடு பிடித்தது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது . அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் கேப்டன் கே.எல். ராகுல் மட்டுமே அதிரடியாக விளையாடினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் கைகொடுக்கவிட்டாலும் கடைசி நேரத்தில் தீபக் ஹூடா மற்றும் கிரிஸ் ஜோர்டன் முயற்சியால் இந்த போட்டியும் டை ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 51 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.

ஏற்கனவே முதல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது ஆச்சர்யமாக இருந்த ரசிகர்களுக்கு இரண்டாவது போட்டியும் சூப்பர் ஓவர் வரை சென்றது மேலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது. இந்த போட்டியில் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி சார்பாக கேப்டன் கே.எல்.ராகுலும், நிகோலஸ் பூரானும் களமிறங்கினர். ஆனால் நிகோலஸ் பூரான் பும்ராவின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து வந்த தீபக் ஹூடாவும், கே.எல்.ராகுலும் இணைந்து 5 ரன்கள் மட்டுமே எடுத்தனர். சூப்பர் ஓவரில் நிச்சயம் மும்பை அணி வெற்றிபெறும் என காத்திருந்த ரசிகர்களும் அடுத்து மும்பை பேட்டிங் செய்யும் பொழுது பந்துவீசிய ஷமி ஷாக் கொடுத்தார்.

மும்பை அணியில் ரோஹித் ஷர்மாவும், குயின்டன் டி காக்கும் களமிறங்கினர். ஷமியின் கட்டுக்கோப்பான பவுலிங்கால் மும்பை அணியால் 5 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. இதனால் முதல் சூப்பர் ஓவரும் டை ஆனது. இதை தொடர்ந்து போட்டி இரண்டாவது சூப்பர் ஓவருக்கு சென்றது. இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணியில் பொல்லார்ட், மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்திற்கு களமிறங்கினர். எதிர்பார்த்தது போலவே இரண்டாவது சூப்பர் ஓவரில் மும்பை அணி 1 விக்கெட் இழந்தாலும் 11 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணிக்கு 12 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து பஞ்சாப் அணியில் கெயில் மற்றும் மாயன்க் அகர்வால் பேட்டிங் செய்ய வந்தனர். கெயில் முதல் பந்திலேயே சிக்ஸருக்கு பறக்க விட பஞ்சாப் வீரர்களுக்கு நம்பிக்கை கிடைக்க தொடங்கியது. அதன் பின்னர் மாயன்க் அகர்வால் இரண்டு ஃபோர் அடித்து பஞ்சாப் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.