Monday, March 27, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யார் பெஸ்ட்? கோலி - தோனி இருவரில் யார் அதிக வெற்றியை...

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யார் பெஸ்ட்? கோலி – தோனி இருவரில் யார் அதிக வெற்றியை பெற்றுள்ளனர்

சிட்னி : இந்தியா ஆஸ்திரேலியா இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில் கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விராட் கோலியின் தலைமை பண்பு எப்படி உள்ளது? கோலி -தோனி இருவரில் யார் சிறப்பாக செயல்பட்டிருக்கின்றனர் என்பதை பார்க்கலாம்.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஒரு நாள்,டி20 மற்றும் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை முதல் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பின்னால் 6 மாதங்களுக்கு பிறகு நடைபெறும் முதல் சர்வதேச தொடர் என்பதால் இந்த தொடரின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது. அதேசமயம் கேப்டன் விராட் கோலிக்கு இந்த தொடர் மிக முக்கியம் என்றே கூற வேண்டும்.

விராட் கோலியின் கேப்டன்சி

கடந்த ஆண்டு உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேறிய போதே இந்திய அணியில் விராட் கோலியின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்தது. அதன் பின்னர் அது குறித்த சர்ச்சைகள் ஓய்ந்திருந்தாலும் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு மீண்டும் எழுந்தது. குறைந்தது டி20 தொடருக்காவது ரோஹித் சர்மா கேப்டனாக பதவியேற்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது. இதில் எப்படியாவது இந்தியா வெற்றி பெற வேண்டும் இல்லையேல் விராட் கோலியின் மீதான விமர்சனம் மேலும் அதிகமாகும்.

தோனி vs கோலி

இப்படிப்பட்ட ஒரு சூழலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி – விராட் கோலி இருவரில் யார் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளனர் என்பதை இப்போது பார்க்கலாம். தோனி தலைமையில் தான் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. இருப்பினும் அப்படிப்பட்ட தோனியின் தலைமையிலேயே இந்திய அணியால் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை அவ்வளவு எளிதில் வெற்றிபெற முடியவில்லை.

தோனி தலைமையில் இந்தியா ஐந்து டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளது. அதில் நான்கில் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. ஒரு தொடரில் மட்டுமே டிரா செய்தது. ஆனால் விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 போட்டிகளில் விளையாடி, இரண்டில் வெற்றியும், இரண்டில் தோல்வியும், இரண்டு தொடர் டிராவிலும் முடிவடைந்துள்ளது. அதில் ஒரு தொடர் ஆஸ்திரேலிய மண்ணில் வைத்தே வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது.

ஒருநாள் தொடரை எடுத்துக்கொண்டால் தோனி தலைமையில் 5 தொடர்களில் விளையாடி ஒரு தொடரில் மட்டுமே வெற்றியும், 4 தொடரில் தோல்வியும் அடைந்துள்ளது. விராட் கோலி தலைமையில் 3 ஒருநாள் தொடரில் பங்கேற்று இரண்டில் வெற்றியும் ஒரு தொடரில் மட்டுமே தோல்வியும் அடைந்துள்ளது. அதேபோல டி20 தொடரில் தோனி தலைமையில் 6 தொடர்களில் விளையாடியுள்ள இந்தியா 4 தொடரில் வென்றுள்ளது. கோலி தலைமையில் 3 தொடர்களில் பங்கேற்று ஒரு தொடரில் வெற்றியும் ஒரு தொடரில் தோல்வியும் ஒன்றில் முடிவுகள் இன்றியும் ஆனது.

தோனியுடன் ஒப்பிடுகையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி சிறந்த ரெக்கார்டை வைத்துள்ளது. இருப்பினும் இந்த ஒரு தொடர் விராட் கோலிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.