துபாய் : டெல்லிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதன் மூலம் தங்களுடைய ப்ளே ஆஃப் கனவை மீண்டும் புதுப்பித்துள்ளது . இந்த வருட ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி ஆச்சர்யம் கொடுக்கும் ஒரு அணியாக மாறியுள்ளது. முதல் பாதியில் மிக மோசமாக தோல்வியை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட பஞ்சாப் அணி இரண்டாம் பாதியில் அதிரடியாக வெற்றிபெற தொடங்கியுள்ளது . யாரோ 4 சின்ன டீமை அடித்து மேல வரல, நாங்க அடித்த நாலு பேருமே டேபிள் டாப்பர்ஸ் என்கிற கேஜிஎப் பட வசனம் போல தான் பஞ்சாப் அணி உருவெடுத்துள்ளது.
நேற்று துபாயில் நடைபெற்ற ஐபிஎல்லின் 38 வது லீக் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா களமிறங்கினர். வழக்கம் போல இந்த போட்டியிலும் ப்ரித்வி ஷா மோசமான ஷாட்களை அடித்து 7 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் தலா 14 ரன்கள் எடுத்தனர்.
டெல்லி அணியில் ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நேற்றைய போட்டியிலும் ஷிகர் தவான் அதிரடியாக ஆடி சதம் அடித்தார். கடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 58 பந்துகளில் 100 ரன்கள் எடுத்த தவான் நேற்றைய போட்டியில் 57 பந்துகளில் 100 ரன்களை எட்டினார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் சதம் அடித்த வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார் ஷிகர் தவான்.
என்னதான் தவான் அதிரடியாக விளையாடினாலும் மறுமுனையில் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையாத காரணத்தினால் டெல்லி அணியின் ஒட்டுமொத்த ரன்களை அதிகரிக்க முடியவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 164 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தவான் 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இதில் 12 ஃபோரும், 3 சிக்ஸர்களும் அடக்கம். பின்னர் 165 என்கிற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.
பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 15 ரன்களிலும், மாயங்க் அகர்வால் 5 ரன்களிலும், க்றிஸ் கெயில் 29 ரன்களிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பஞ்சாப் அணியின் முக்கியமான 3 விக்கெட்டுகளும் அடுத்தடுத்து வீழ்ந்ததால் அந்த அணி தொடக்கத்தில் தடுமாறியது. ஆனால் அதன் பின்னர் களமிறங்கிய நிகோலஸ் பூரான் மற்றும் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்து பஞ்சாப் அணியை சரிவில் இருந்து மீட்டனர். பூரான் அதிரடியாக ஆடி 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இறுதியாக பஞ்சாப் அணி 19 ஓவர்களிலேயே 5 விக்கெட்டை இழந்து 167 ரன்கள் எடுத்து இந்த போட்டியில் வெற்றிபெற்றது.
இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் பஞ்சாப் ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மீதமுள்ள போட்டிகளிலும் பஞ்சாப் வெற்றி பெற்றால் அந்த அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
முதல் பாதியில் வெறும் இரண்டு புள்ளிகளுடன் இறுதி இடத்தில் இருந்த பஞ்சாப் இரண்டாம் பாதியில் அதிரடியாக மீண்டு வந்துள்ளது.