நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அகாடமியில் தன்னுடைய பயிற்சியை தொடங்கியுள்ளார்.
கொரோனா பாதிப்புக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட் தொடர்கள் தொடங்கியதில் இருந்தே ரோஹித் சர்மாவின் பிட்னஸ் குறித்தும் அவருடைய ஃபார்ம் குறித்தும் தொடர் விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்தன. அதிலும் குறிப்பாக ஐபிஎல் தொடரின் போது காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காமல் போனது இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் இருப்பை கேள்விக்குறியாக்கியது.
இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று விதமான கிரிக்கெட் தொடரிலும் இந்திய அணியில் ரோஹித் சர்மா சேர்க்கப்படவில்லை. இதை தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று இறுதி போட்டியில் தன்னுடைய பார்மை நிரூபித்தார் ரோஹித் சர்மா. இதனால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சேர்க்கப்படாமல் போனாலும் டெஸ்ட் அணியில் மட்டும் ரோஹித் மீண்டும் சேர்க்கப்பட்டார். இதற்கிடையே ரோஹித் நிலை குறித்து கருத்து கூறிய பிசிசிஐ தலைவர் கங்குலி, 70 சதவிகிதம் தான் ரோஹிர் உடல் தகுதியோடு இருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் விதமாக ரோஹித் சர்மா தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது பயிற்சியைத் தொடங்கினார். மேலும் காயம் காரணமாக ஐபிஎல் தொடரின் பாதியிலேயே வெளியேறிய இஷாந்த் சர்மாவும் இப்போது அவருடன் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். தலைமை தேர்வாளர் சுனில் ஜோஷி மற்றும் என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட் ஆகியோரின் மேற்பார்வையில் இஷாந்த் சர்மா முழு வேகத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ரோஹித் மற்றும் இஷாந்த் சர்மா இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு ஒன்றாக பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு சென்ற பின் அவர்கள் 14 நாள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்னரே இந்திய அணியில் இணைய முடியும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கேப்டன் விராட் கோலி விடுப்பில் செல்ல இருப்பதால் யாரை கேப்டனாக நியமனம் செய்வார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்திய அணிக்கு குறுகிய ஓவர்கள் போட்டியில் ரோஹித் சர்மாவை கேப்டனாக்க வேண்டும் என்கிற கருத்துக்களும் எழுந்துள்ள நிலையில் அவருடைய உடல் தகுதி மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.