Tuesday, March 28, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஐபிஎல் போட்டியில் சாதித்த அதே 4 பேர்.. இந்திய அணியில் தேர்வான தமிழர்கள்

ஐபிஎல் போட்டியில் சாதித்த அதே 4 பேர்.. இந்திய அணியில் தேர்வான தமிழர்கள்

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என கூறலாம். குறிப்பாக முக்கிய வீரர் ரோஹித் ஷர்மா மூன்று வகையான தொடரிலும் இடம்பெறவில்லை. அதேநேரம் பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரின்போது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐபிஎல்லில் அசத்திய தமிழக வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்டதன் நோக்கமே பல உள்ளூர் வீரர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக தான். ஆனால் இடையில் அந்த நோக்கம் பெரிதளவில் நிறைவேறாவிட்டாலும் இந்த சீசனில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல வெளிநாட்டு வீரர்கள் கலந்துகொள்ள முடியாமல் போனதால் உள்ளூர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை சில வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டனர்.

குறிப்பாக சில தமிழக வீரர்கள் அந்தந்த ஐபிஎல் அணியின் தவிர்க்க முடியாத வீரர்களாகவும் வளம் வந்தனர். ஹைதராபாத் அணியில் இடம்பெற்ற நடராஜன் அதிக வேகம் மற்றும் துல்லியமான யார்க்கர் மூலம் தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிய நிலையில் ஹைதராபாத் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் என்கிற பொறுப்பு கொடுக்கப்பட்டு அதை சரியாக செய்தும் முடித்தார் நடராஜன். இதனால் கேப்டன் வார்னர் நடராஜனை நம்பி டெத் ஓவர்களில் பவுலிங் செய்ய வைத்தார். அதிலும் கட்டுக்கோப்பாக பவுலிங் செய்து அசத்தினார் நடராஜன்.

கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள வருண் சக்ரவர்த்தி மீது தொடக்கத்தில் இருந்தே பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆரம்பத்தில் சரியாக பவுலிங் செய்து வந்தாலும் இடையில் சில போட்டிகளில் விக்கெட் எடுக்க முடியாமல் தடுமாறினார். ஆனால் பின்னர் வலுவான டெல்லிக்கு எதிரான போட்டியில் அற்புதமான கம்பேக் கொடுத்து ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதித்தார். இதனால் இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் பலருடைய பார்வையும் வருண் சக்ரவத்தி பக்கம் திரும்பியது .

அதேபோல பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலியின் முக்கியமான ஸ்பின் பவுலராக மாறியிருக்கிறார் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்க்டன் சுந்தர். அந்த அணியில் யுஸ்வேந்திர சஹலுக்கு பிறகு ஸ்பின் பவுலிங்கில் வாஷிங்க்டன் சுந்தர் அசத்தி வருகிறார். மற்றொரு தமிழக வீரர் அஸ்வின் ஏற்கனவே இந்திய டெஸ்ட் அணியில் இருந்தாலும் அவருடைய ஐபிஎல் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.டெல்லி அணியில் இடம்பெற்ற அஸ்வின் தொடக்கத்தில் காயம் காரணமாக சில போட்டிகளில் பங்கேற்காமல் வெளியேறிய நிலையில் பின்னர் அதில் இருந்து மீண்டு வந்தும் சுமாராகவே பவுலிங் செய்து வருகிறார்.

இதற்கிடையே தான் அடுத்தமாதம் நடைபெற உள்ள இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட், ஒருநாள், மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணி குறித்த அறிவிப்பு நேற்று வெளியானது. அதில் டெஸ்ட் அணியில – விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, கேஎல் ராகுல், புஜாரா, அஜின்க்யா ரஹானே, ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், விரிதிமான் சாஹா, ரிஷப் பண்ட், பும்ரா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சிராஜ்

இந்திய ஒருநாள் அணியில் – விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்

இந்திய டி20 அணி – விராட் கோலி (கேப்டன்), ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்க்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் நடராஜன் உள்ளிட்ட சில இளம் வீரர்கள் விளையாடும் அணியிலோ அல்லது 15 பேர் கொண்ட அணயிலோ இடம்பெற மாட்டார்கள். மாறாக வீரர்களுக்கு வலைப்பயிற்சியின் போது அதிகம் பயன்படுத்தப்படுவார்கள். ஒருவேளை சைனி போன்ற வீரர்கள் சொதப்பி அப்போது இவர்கள் தங்கள் திறமையை முழுமையாக காண்பித்தால் விளையாடும் அணியில் இடம்பெறவும் வாய்ப்புள்ளது.