Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்மேட்ச் வின்னராக அசத்திய ராகுல்... தொடரை வென்று இந்தியா அபாரம்..! இலங்கைக்கு பரிதாப தோல்வி..!

மேட்ச் வின்னராக அசத்திய ராகுல்… தொடரை வென்று இந்தியா அபாரம்..! இலங்கைக்கு பரிதாப தோல்வி..!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இலங்கை அணி டி20 தொடரை இழந்துள்ள நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டியை இந்திய அணி அபாரமாக வென்றது.
இதையடுத்து, தொடரை இந்தியா கைப்பற்றுமா..? அல்லது தொடரை வெல்லும் போட்டியில் இலங்கை நீடிக்குமா..? என்பதை தீர்மானிக்கும் 2வது ஒருநாள் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் பெர்னாண்டோ 20 ரன்களில் அவுட்டானாலும், அடுத்து ஜோடி சேர்ந்த மெண்டிஸ் – நுவானிடு பெர்னாண்டோ சிறப்பாக ஆடினர். அணியின் ஸ்கோர் 102 ரன்களை எட்டியபோது சிறப்பாக ஆடிய குசல் மெண்டிஸ் அவுட்டானார். அடுத்து சில நிமிடங்களில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த பெர்னாண்டோ தேவையில்லாமல் ரன் அவுட்டானார்.

கடந்த போட்டியில் சதம் விளாசிய கேப்டன் சனகா 2 ரன்களில் போல்டாக இலங்கை 126 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த ஹசரங்கா, வெல்லாலகே பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்களை எடுத்தது. குல்தீப்யாதவ், முகமது சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் – சுப்மன்கில் அதிரடி தொடக்கம் தந்தனர். ரோகித் 17 ரன்கள் எடுத்திருந்தபோது விக்கெட் கீப்பர் மெண்டிசிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அவரைத் தொடர்ந்து தொடக்க வீரர் சுப்மன்கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சதமடித்து அசத்திய விராட்கோலி 4 ரன்களில் போல்டானார். மறுமுனையில் சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் அய்யர் 28 ரன்களில் அவுட்டானார்.

இந்திய அணி 86 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது கே.எல்.ராகுல் – ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து நிதானமாகவும், பொறுமையாகவும் ஆடினர். குறிப்பாக, ஃபார்ம் அவுட், அணியில் இடம் குறித்த கேள்வி உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களுடன் ஆடிய கே.எல். ராகுல் தான் இழந்த பார்மை மீட்கும் விதத்தில் ஆடினார். இதனால், ஆட்டம் இந்திய அணியின் வசம் மெல்ல மெல்ல வரத்தொடங்கியது.

இந்த ஜோடியை பிரிக்க இலங்கை கேப்டன் பல முயற்சிகள் எடுத்தார். இந்தியாவின் ஸ்கோர் 161 ரன்களை எட்டியபோது ஹர்திக் பாண்ட்யா 53 பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது கருணரத்னே பந்தில் அவுட்டானார். அடுத்து கே.எல்.ராகுலுடன் அக்ஷர் படேல் ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். மறுமுனையில் இந்தியா வெற்றியை நெருங்கியபோது அக்ஷர் படேல் 21 ரன்களில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 43.2 ஓவர்களில் 219 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை அசத்தியது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ஃபார்முக்கு திரும்பிய கே.எல்.ராகுல் 64 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். குல்தீப்யாதவ் 10 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது.