இந்தியா வந்துள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி தற்போது ஒருநாள் போட்டித்தொடரில் ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது. அந்த போட்டியில் இந்திய அணியின் சுப்மன்கில் சதமடித்து மறக்க முடியாத போட்டியாக அந்த போட்டியை மாற்றினார்.
இந்த நிலையில் இரு அணிகளும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சட்டீஸ்கர் மாநிலத்தில் ராய்ப்பூர் மைதானத்தில் நடக்கிறது. மொத்தம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் இரண்டாவது போட்டியான இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை வெல்லலாம். அதே சமயத்தில், தொடரை வெல்வதற்கான போட்டியில் நீடிப்பதற்காக நியூசிலாந்து அணியும் களத்தில் இறங்கும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் அசுர பலமாக உள்ளது. தொடக்க வீரர்கள் ரோகித்சர்மா – சுப்மன்கில் அபாரமான தொடக்கத்தை அளிக்கின்றனர். குறிப்பாக, சதம் இரட்டை சதம் என அடுத்தடுத்த போட்டிகளில் விளாசிய சுப்மன்கில் வருங்கால இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறியுள்ளார்.
மேலும், விராட்கோலி கடந்த போட்டியில் ஏமாற்றினாலும் இந்த போட்டியில் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். பின்வரிசையில் ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் என அசத்தலான பேட்டிங் ஆர்டர் உள்ளது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அசத்த காத்துள்ளனர்.
நியூசிலாந்து அணியில் கடந்த போட்டியில் அந்த அணியின் முன்னணி நட்சத்திரங்கள் சொதப்பினர். அதனால், இந்த போட்டியில் கேப்டன் டாம் லாதம், ஆலன், கான்வே. நிகோலஸ், மிட்செல் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம். கடந்த போட்டியில் இந்தியாவிற்கு பயத்தை காட்டிய ப்ராஸ்வெல் இந்த போட்டியிலும் மிரட்டுவார் என்று எதிர்பார்க்கலாம். பந்துவீச்சில் சாப்மேன், சான்ட்னர், பெர்குசன் சிக்கனமாக வீச வேண்டியது அவசியம்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ் பலமாக உள்ளார். கடந்த காலத்தில் ரன்களை வாரி வழங்கிய அவர் தற்போது சிக்கன பந்துவீச்சாளராக உருவெடுத்துள்ளார். முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர். உம்ரான் மாலிக் ஆகியோர் வேகத்தில் பலமாக உள்ளனர். சுழலில் குல்தீப்யாதவ், சாஹல், சுந்தர் உள்ளனர்.
கடந்த போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி அளித்ததால் இந்த போட்டியிலும் இந்திய அணிக்கு கடும் சவால் காத்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம். போட்டி நடைபெறும் மைதானத்தில் இதுவரை 6 ஐ.பி.எல். போட்டிகள்தான் நடைபெற்றுள்ளது.