இந்தூரில் இன்று தொடங்கிய 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இந்திய ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே அமைந்திருக்கும். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் இந்தியா 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 156 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.
இந்த தொடர் தொடங்கியது முதல் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாகவும், நம்பிக்கையாகவும் இருப்பது ஜடேஜா. இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி இழந்த 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா மட்டுமே எடுத்தார். இதன்மூலம் ஜடேஜா சர்வதேச கிரிக்கெட் போட்டியில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட்டை ஜடேஜா இன்றைய போட்டியில் அவுட்டாக்கியபோது அவரது சர்வதேச கிரிக்கெட் கேரியரில் அது 500வது விக்கெட்டாக அமைந்தது. இதன்மூலம் ஜடேஜா ஜாம்பவான் கபில்தேவ் பட்டியலில் இணைந்துள்ளார். அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஆயிரம் ரன்கள் மற்றும் 500 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த ஒரே இந்தியர் என்ற பெருமையை கபில்தேவ் மட்டுமே இதுநாள் வரை தன்வசம் வைத்திருந்தார்.
அவரது சாதனை பட்டியலில் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஜடேஜா இணைந்துள்ளார். ஜடேஜா சர்வேசத கிரிக்கெட்டில் அதாவது டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி 5 ஆயிரம் ரன்களையும், 500 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்துள்ளார். கபில்தேவ் இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக 9 ஆயிரத்து 31 ரன்களும், 687 விக்கெட்டுகளையும் 356 போட்டிகளில் எடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் இந்த சாதனையை படைக்கும் 11வது வீரர் என்ற பெருமையையும் ஜடேஜா பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த சாதனையை கபில்தேவ், வாசிம் அக்ரம், ஜேக்ஸ் காலீஸ், இம்ரான் கான், ஷகிப் அல் ஹசன், ஷாகித் அப்ரீடி, டேனியல் வெட்டோரி, சமீந்தா வாஸ், ஷான் பொல்லாக் மற்றும் இயான் போத்தம் மட்டுமே படைத்துள்ளனர்.
ALSO READ | 12 இன்னிங்சா ஒரு ஃபிப்டி கூட இல்ல…! ரன்மெஷின் கோலி கம்பேக் தருவது எப்போது..?