Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்இந்திய அணியின் சிறந்த கண்டுபிடிப்பு இவர்.. நடராஜனை வியந்து பாராட்டிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்

இந்திய அணியின் சிறந்த கண்டுபிடிப்பு இவர்.. நடராஜனை வியந்து பாராட்டிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்

சிட்னி : இந்திய அணியில் இடம்பெற்று இருக்கும் தமிழக வீரர் நடராஜன் இந்த தொடரின் சிறந்த கண்டுபிடிப்பு என்று ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் க்ளேன் மெக்ராத் பாராட்டியிருக்கிறார்.நடராஜனின் பவுலிங் திறமையை பார்த்து கிரிக்கெட் உலகமே அவரை பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு இந்திய பவுலருக்கும் அறிமுக போட்டிகளிலேயே இவ்வளவு பெரிய வரவேற்பும் உலகம் முழுவதும் பாராட்டுகளும் இருந்ததாக தெரியவில்லை. சேலம் மாவட்டம் சின்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்று சர்வதேச கிரிக்கெட் உலகையே வியக்க வைத்திருக்கிறார் தமிழக வீரர் நடராஜன்.

2017 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொண்டாலும், அந்த தொடரில் பெரிதாக சாதிக்கவில்லை. பின்னர் காயம் காரணமாக ஒரு வருடம் விளையாடாமல் இருந்தார் அடுத்ததாக 2020 ஆம் ஆண்டு தான் மீண்டும் நடராஜனுக்கு போட்டிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

2020 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் ஆரம்பம் முதலே அசத்தலாக பவுலிங் செய்து வந்தார் நடராஜன். அந்த அணியின் முக்கிய பவுலர் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியவுடன் அவருடைய பொறுப்பையும் சேர்த்து கவனித்து வந்தார். இருந்த போதிலும் இந்த தொடர் முழுவதுமே நடராஜன் சிறப்பாக பவுலிங் செய்து வந்தார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் தேர்வானார்.

ஆனால் விளையாடும் பிளேயிங் லெவனில் நடராஜனுக்கு முதலில் இடம் கிடைக்கவில்லை. பயிற்சியின் போது வீரர்களுக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பு தான் கிடைத்தது. இதற்கிடையே டி20 அணியில் இடம் பெற்று இருந்த வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதில் டி20 அணியில் நடராஜன் இடம் பெற்றார். மற்றும் கடைசி நேரத்தில் ஒருநாள் தொடரிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது.

Natarajan

அசத்திய நடராஜன்:

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய நவ்தீப் சைனி மோசமாக சொதப்பினார், இதனால் ஏற்பட்ட விமர்சனங்களுக்கு பிறகு மூன்றாவது ஒருநாள் போட்டியில் நடராஜன் சேர்க்கப்பட்டார். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாக பயன்படுத்திய நடராஜன் 10 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி 70 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

மேக்ஸ்வெல் மட்டுமே நடராஜனின் ஓவர்களில் கொஞ்சம் அதிரடியாக ஆடினார். இதனால் முதல் டி20 போட்டியிலும் நடராஜன் இடம் பிடித்தார். எதிர்பார்த்தது போலவே அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார். இதன் பிறகு தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும் நடராஜனை திரும்பி பார்க்க தொடங்கியது. இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் எல்லா பவுலர்களும் திணறிய நிலையில் நடராஜன் மட்டுமே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினார். இதனால் அவருக்கு தான் ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்படும் என்று தான் எதிர்பார்த்ததாக ஹர்திக் பாண்டியவே கூறியிருந்தார்.

நடராஜனை பாராட்டிய மெக்ராத்:

பல முன்னாள் ஜாம்பவான்கள் அனைவரும் நடராஜனை பாராட்ட தொடங்கினர். ஆரம்பத்தில் நடராஜன் வருகையை விமர்சனம் செய்த சஞ்சய் மஞ்சரேக்கர் கூட அவருடைய பவுலிங் திறமையை பாராட்டியிருந்தார். இந்த நிலையில் தான் இப்போது ஆஸ்திரேலிய ஜாம்பவான் க்ளேன் மெக்ராத் நடராஜனை சிறந்த கண்டுபிடிப்பு என்று வியந்து பாராட்டியிருக்கிறார்.

நடராஜன் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறார். அவர் நிச்சயமாக இந்தியாவுக்கான இந்த சுற்றுப்பயணத்தின் சிறந்த கண்டுபிடிப்பு, அவர் இப்படியே தொடர்வார் என்று நம்புகிறேன் என்று மெக்ராத் கூறினார். அவர் மட்டுமல்ல கிரிக்கெட் ஆஸ்திரேலியா ட்வீட்டர் பக்கத்திலும் நடராஜனின் அறிமுக போட்டிகளை வியந்து பாராட்டியது. மற்றும் ஆஸ்திரேலிய ஊடகங்களும் நடராஜனின் வளர்ச்சியை புகழ்ந்து வருகின்றன. பும்ரா இல்லாமல் இந்திய அணியால் வெற்றி பெற முடியாது என்கிற நிலையை நடராஜன் மாற்றி இருக்கிறார். சரியான வழிகாட்டுதல் இருந்தால் உலகின் சிறந்த பவுலராக வருவதற்கும் வாய்ப்புள்ளதாக பாராட்டியுள்ளன.

இந்திய அணியில் ஏற்கனவே புவனேஸ்வர் குமார், ஷமி, பும்ரா ஆகிய மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இவர்களில் யாராவது பங்கேற்காமல் போனால்தான் நடராஜனுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் இப்போதைய நிலையை பார்த்தால் நடராஜன் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க புவனேஷ்வர் குமார் அல்லது ஷமியின் இடம் கேள்விக்குறியாக்கப்படலாம் என்கின்றனர்.

அதற்கேற்ப இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியிலும் நடராஜன் இடம் பெற வேண்டும் என்கிற குரல்கள் வலுப்பெற தொடங்கியுள்ளது. முன்னாள் வீரர் கைப் இது தொடர்பாக இந்திய அணியை வலியுறுத்தியுள்ளார். தன்னுடைய அறிமுக போட்டிகளிலேயே நடராஜன் கிரிக்கெட் உலகம் முழுவதுமே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார். இதனால் இனிவரும் காலங்களில் இதை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.