Tuesday, March 28, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்கும் இங்கிலாந்து வீரர்! யார் இந்த கேரி?

ஜிம்பாப்வே அணிக்காக களமிறங்கும் இங்கிலாந்து வீரர்! யார் இந்த கேரி?

சமீபகாலமாக டி20 கிரிக்கெட் போட்டியில் இளம் நாடுகள் மிகவும் சிறப்பாக ஆடி வருகின்றனர். அந்த வகையில் ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் கடந்த டி20 போட்டியில் கவனிக்கத்தக்க வகையில் ஆடின.

இந்த நிலையில், அயர்லாந்து அணியுடன் மோதும் ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிம்பாப்வே அணியின் நட்சத்திர வீரர்களான சிக்கந்தர் ராசா, முசரபானி, சகப்வா மற்றும் ஷம்பா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ள ஜிம்பாப்வே அணியில் முன்னாள் இங்கிலாந்து வீரர் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கேரி பாலன்ஸ் சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் ஆட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து, அவர் ஜிம்பாப்வே அணியில் களமிறங்கியுள்ளார். இதுதொடர்பாக, பேசியுள்ள கேரி ஜிம்பாப்வே அணிக்காக விளையாட இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். சிறந்த பயிற்சியாளர் மற்றும் திறமையான வீரர்களுடன் இணைந்து விளையாடுவதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

எர்வின் கிரெக் தலைமையிலான ஜிம்பாப்வே அணியில் கேரி பாலன்ஸ், ப்ர்ல் ரியான், சடாரா, எவான்ஸ் ப்ராட்லீ, ஜோங்வோ, கையா, மடாந்தே, மாதவரே வெஸ்லி, மாருமணி, மகசட்சா, முன்யோங்கா டோனி, நிகரவா, நிாயச்சி விக்டர், வில்லியம்ஸ் ஆகியோர் களமிறங்குகின்றனர். ஹாக்டன் டேவ் பயிற்சியாளர் ஆவார்.

34 வயதான கேரி பாலன்ஸ் இதுவரை 23 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 1498 ரன்களையும், 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி 297 ரன்களையும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் 7 அரைசதம், 4 சதங்களை விளாசியுள்ளார். ஒருநாள் போட்டியில் 2 அரைசதம் விளாசியுள்ளார்.

முதல் தர போட்டிகளில் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள கேரி 170 போட்டிகளில் 11 ஆயிரத்து 876 ரன்களை எடுத்துள்ளார். 41 சதங்களையும், 55 அரைசதங்களையும் விளாசியுள்ளார். 100 டி20 போட்டிகளில் ஆடி 7 அரைசதங்கள் உள்பட 1807 ரன்களை எடுத்துள்ளார்.

கேரி 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து அணிக்காக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். 2013ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து அணிக்காக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார்.