Tuesday, March 28, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்தொடர்ந்து 5 போட்டிகளில் மோசமான தோல்வியடைந்த இந்தியா.. இதுதான் காரணம்.. ஆறுதல் வெற்றியாவது பெறுமா?

தொடர்ந்து 5 போட்டிகளில் மோசமான தோல்வியடைந்த இந்தியா.. இதுதான் காரணம்.. ஆறுதல் வெற்றியாவது பெறுமா?

சிட்னி : இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்திய அணி பறிகொடுத்த நிலையில் மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்று ரசிகர்கள் காத்துகொண்டு உள்ளனர்.

2020 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக பிப்ரவரி மாதம் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்று அந்த தொடரில் 3-0 எனும் கணக்கில் தோல்வியை சந்தித்தது. தோனிக்கு பிறகு விராட் கோலி ஒருநாள் தொடரின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, களத்தில் தோனி தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வந்தார். இவர்களின் காம்போ இந்திய அணியை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் முன்னணியில் வைத்திருந்தது. தோனி கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிய பிறகு ரோஹித் சர்மா துணை கேப்டனாக இருந்து விராட் கோலிக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார்.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மா இந்திய அணியில் இடம்பெறவில்லை. அப்போதே விராட் கோலி தடுமாற தொடங்கினார். 3 ஒருநாள் தொடரையும் இழக்க வேண்டிய சூழல் உருவானது. பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நீண்ட காலமாக இந்திய அணி எந்த ஒரு சர்வதேச தொடரிலும் பங்கேற்கவில்லை. கிட்டத்தட்ட 6 மாத இடைவெளிக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்றது. இதிலும் ரோஹித் சர்மா காயம் காரணமாக இடம்பெறவில்லை. அப்போதே இந்திய அணி எப்படி சமாளிக்க போகிறது என்கிற கேள்வியும் எழுந்தது. எதிர்பார்த்தது போலவே இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. இந்த 2 தோல்விகளுடன் சேர்த்து இந்திய அணி தொடர்ச்சியாக 5 ஒருநாள் போட்டிகளில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

இதற்கு களத்தில் விராட் கோலியின் கேப்டன்சி காரணமாக சொல்லப்பட்டாலும், இந்திய அணி தேர்வு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் தோனிக்கு பிறகு நிரந்தரமான ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனோ அல்லது சரியான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனோ இல்லாமல் திணறி வந்தது. உலக கோப்பை தொடரிலும் இந்த சிக்கல் எதிரொலித்தது. பெரிய விவாதங்களுக்கு பிறகு இப்போது தான் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் ஓரளவுக்கு சரி செய்ய பட்டுள்ளது. ஆனால் அதற்குள் அடுத்த பிரச்சனையாக போதுமான அளவில் பவுலர்கள் இல்லாதது. அஸ்வின், சாஹல் – குல்தீப் இணை என்று ஸ்பின் பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணியில் இப்போது சாஹல் மட்டுமே ஒரே ஒரு முழுநேர ஸ்பின் பவுலராக இருக்கிறார். மற்றவர்களுக்கு விளையாடும் பிளேயிங் லெவனில் இடம் கிடைப்பதில்லை.

பவுலிங்கில் மாற்றம் வேண்டும்:

ஜடேஜா மற்றொரு ஸ்பின் பவுலராக இருந்தாலும், கூடுதலாக ஒரு முழுநேர ஸ்பின் பவுலர் இருந்தால் மட்டுமே இந்திய அணிக்கு பவுலிங்கில் பக்க பலமாக இருக்கும். அதை விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் சைனி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவது விபரீத முடிவாகவே பார்க்கப்படும்.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய அணியில் 4 முழுநேர பவுலர்கள் இடம்பெற்று உள்ளனர். அதில் ஒருவர் மட்டுமே ஸ்பின் பவுலர். இவர்கள் தவிர ஒரு ஆல் ரவுண்டர் பவுலராக ஜடேஜா இடம் பெற்றுள்ளார். மொத்தமே இந்த 5 பேர் மட்டுமே பவுலிங் செய்யும் நிலையில் இவர்களுடைய பவுலிங்கை ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் எளிதாக கணிக்க தொடங்கிய பின்னரும் அவர்களை மட்டுமே வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பவுலிங் செய்வதை நிறுத்திவிட்டு நிலையில் அவரை ஆல்ரவுண்டராக கணக்கில் எடுக்க முடியாது. இரண்டாவது போட்டியில் மட்டும் 4 ஓவர்கள் வீசினார் ஆனால் எல்லா போட்டிகளிலும் பவுலிங்கில் உதவுவார் என்பது உறுதியாக சொல்ல முடியாது.

வலுவான ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதிகபட்சமாக 7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும் விராட் கோலியின் முடிவு சரியானதாக இருந்தாலும், மோசமான பவுலிங் ஆர்டரை வைத்துக்கொண்டு எதனை பேட்ஸ்மேன்கள் இருந்தாலும் போதாது. ஆஸ்திரேலிய அணி ஒவ்வொரு போட்டியிலும் 370 க்கு மேல் இலக்கு நிர்ணயிக்கும் போது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சுக்கு முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சமாளிப்பதும் கடினம் தான். இந்திய அணியின் இப்போதைய தேவை வலுவான பவுலிங் ஆர்டர் தான். பேட்ஸ்மேன்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் பந்துவீச்சு மூலம் எதிரணியை கட்டுப்படுத்த முடிந்தால் இந்தியாவால் போட்டியில் வெல்ல முடியும். இந்திய அணி அதன் வழக்கமான உத்தியில் இருந்து விலகி சென்றுள்ளதே அதன் தோல்விக்கும் காரணம் என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.

சைனி போன்ற அதிகம் ரன்களை விட்டுக்கொடுக்கும் வீரர்களுக்கு பதில் நடராஜன் போன்ற வீரர்களை களமிறக்கி பார்க்கலாம். மேலும் ஆஸ்திரேலியாவின் தாக்குதல் யுக்தியை தடுக்க போதுமான அளவு ஸ்பின் பவுலர்களும் அவசியம். அதுமட்டுமல்லாமல் பும்ரா போன்ற உலக தரம் வாய்ந்த வீரர்கள் மீண்டும் தங்களுடைய பழைய பார்ம்க்கு திரும்ப வேண்டும். ஏனெனில் 2018-2019 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா வெற்றி பெற பும்ராவின் பவுலிங் முக்கிய காரணமாக அமைந்தது.இதனால் இனிவரும் போட்டிகளில் இந்தியாவின் பழைய யுக்தியுடன் வலுவான பவுலிங் ஆர்டரை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டால் மட்டுமே ஆறுதல் வெற்றியாது கிடைக்கும்.