Monday, May 22, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்சுத்தி போடுங்கப்பா.. அல்வா சாப்பிடுவது போல இரட்டை சதம் விளாசும் இந்திய வீரர்கள்! நெருங்க முடியுமா

சுத்தி போடுங்கப்பா.. அல்வா சாப்பிடுவது போல இரட்டை சதம் விளாசும் இந்திய வீரர்கள்! நெருங்க முடியுமா

இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பையை கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். ஆனால், நிச்சயம் உலகின் மற்ற முன்னணி கிரிக்கெட் நாடுகள் எல்லாம் இந்திய அணியை பார்த்து பொறாமைப்படும். ஹைதரபாத்தில் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டி அதை நிரூபித்துள்ளது.

5 பேர் இந்தியர்கள்:

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் விளாசுவது என்பது அல்வா சாப்பிடுவது போல மாறி வருகிறது. சுமார் 50 ஆண்டு காலமாக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இதுவரை 8 வீரர்கள் மட்டுமே இரட்டை சதம் விளாசியுள்ளனர். அவர்களில் 5 பேர் இந்தியர்கள் ஆவார்கள். அதிலும், இந்திய வீரர் ரோகித்சர்மா மட்டும் 3 முறை இரட்டை சதம் விளாசி யாருமே நெருங்க முடியாத இடத்தில் உள்ளார்.

வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெயில், பாகிஸ்தானின் பக்கர் ஜமான், நியூசிலாந்தின் மார்டின் கப்தில் ஆகியோர் எஞ்சிய வீரர்கள ஆவார்கள். மற்ற நாடுகளில் ஒரு வீரர்கள் இரட்டை சதம் அடிப்பது என்பதே சவாலான விஷயமாக மாறியுள்ள நிலையில், இந்திய அணியில் 5 பேர் இரட்டை சதம் விளாசியுள்ளனர். அவர்களில் 3 பேர் நடப்பு இந்திய அணியில் விளையாடி வருகின்றனர்.

இரட்டை சத வேட்டை

இந்திய அணிக்காக மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கடந்த 2010ம் ஆண்டு முதன்முறையாக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சத வேட்டையைத் தொடங்கி வைத்தார். அன்று அவர் தொடங்கி வைத்த பாதையில் சேவாக் அடுத்த ஆண்டே வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஒரு இரட்டை சதம் விளாசினார். அவருக்கு அடுத்து ரோகித்சர்மா 2013ம் ஆண்டு, 2014ம் ஆண்டு, 2017ம் ஆண்டு இரட்டை சதம் விளாசி பிரமாதப்படுத்தினார். கடந்தாண்டு இஷான் கிஷானும், இன்று சுப்மன்கில்லும் இரட்டை சதம் விளாசியுள்ளனர்.

இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியல்:

• சச்சின் டெண்டுல்கர் – 200 (2010ம் ஆண்டு)
• சேவாக் – 219 (2011ம் ஆண்டு)
• ரோகித் சர்மா – 209 (2013ம் ஆண்டு)
• ரோகித் சர்மா – 264 (2014ம் ஆண்டு)
• ரோகித் சர்மா – 208 (2017ம் ஆண்டு)
• இஷான்கிஷான் – 210 (2022ம் ஆண்டு)
• சுப்மன்கில் – 208 (2023ம் ஆண்டு)

இந்திய அணியில் இரட்டை சதம் விளாசும் அளவிற்கு திறமை வாய்ந்த பல வீரர்கள் உள்ளனர். இதனால், வருங்காலங்களிலும் இந்திய வீரர்களின் இரட்டை சத வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.