Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்சாம்பியன் மும்பையை டெல்லி எப்படி சமாளிக்கும்? மும்பை இந்தியன்ஸின் பலம் பலவீனம் என்ன?

சாம்பியன் மும்பையை டெல்லி எப்படி சமாளிக்கும்? மும்பை இந்தியன்ஸின் பலம் பலவீனம் என்ன?

துபாய்: 2020 ஐபிஎல் தொடரின் பைனல் போட்டி இன்று நடைபெற உள்ளது. முதல் தகுதி சுற்று போட்டியில் வெற்றி பெற்று நேரடியாக தகுதி பெற்ற மும்பை அணியும், இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்திய டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த சீசன் முழுவதும் அசைக்க முடியாத அணியாக மும்பை உள்ளது, அப்படி மும்பை அணியின் பலம் பலவீனம் என்னதான் என்பதை பார்க்கலாம்.

சொல்லப்போனால் இந்த சீசனில் முழுமையான பேட்டிங் ஆர்டர் வைத்துள்ள அணி மும்பை மட்டுமே. அந்த அணியின் தொடக்க வீரர் குயிண்டன் டீ காக் 15 போட்டிகளில் 483 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல மிடில் ஆர்டரிலும் அந்த அணி வலுவாகவே உள்ளது. இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மும்பை அணியை சேர்ந்த மூன்று பேர் உள்ளனர். டீ காக் தவிர மற்ற இரண்டு பேர் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷான் உள்ளனர். இதில் சூர்யகுமார் யாதவ் 15 போட்டிகளில் 461 ரன்களும், இஷான் கிஷான் 13 போட்டிகளில் 483 ரன்களும் எடுத்துள்ளனர்.

அடுத்து மும்பை அணியின் டெத் ஓவர் பேட்ஸ்மேன்கள் பற்றி சொல்லவே வேண்டாம். ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு என இரண்டு அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர். உதாரணமாக டெல்லிக்கு எதிரான முதல் தகுதி சுற்று போட்டியில் மும்பை அணி 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் ஹர்திக் பாண்டியாவின் ருத்ர தாண்டவத்தால் 20 ஓவர் முடிவில் மும்பை 5 விக்கெட் இழப்புக்கு 200 ரன்களை எடுத்திருந்தது என்றால் அவர்களின் பேட்டிங் பலம் குறித்து தெரிந்து கொள்ளலாம். ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் மட்டும் 183க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கிறார்.

அடுத்ததாக பவுலிங்.. பும்ரா, போல்ட் என இரண்டு அட்டாக் செய்யக்கூடிய உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் உள்ளனர். ஸ்பின் பவுலிங்கில் 2020 ஐபிஎல் தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி ராகுல் சாஹர் முக்கியமான ஸ்பின் பவுரலராக இருக்கிறார். மேலும் மலிங்காவுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட ஜேம்ஸ் பேட்டின்சன் 10 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை நிரூபித்துள்ளார்.

இந்த சீசனில் எந்த மும்பை பவுலர்களும் இரட்டை இலக்க எகானமி லைத்திருக்கவில்லை. பவர்ப்ளே சமயத்திலும் கூட சிறப்பாகவே பந்துவீசியுள்ளனர். பலவீனம் என்று பார்த்தால் பும்ரா மற்றும் போல்ட் இருவரை மட்டுமே அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. உதாரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா தடுமாறியது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியது. அந்த போட்டியில் பும்ரா 38 ரன்களை விட்டுத் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பேட்டிங்கில் கேப்டன் ரோஹித் சர்மா இடையில் 4 போட்டியில் காயம் காரணமாக பங்கேற்க வில்லை,. அதன்பிறகு வந்த அவர் தன்னுடைய பார்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் காயத்துக்கு பிறகு பங்கேற்ற இரண்டு போட்டியிலும் மோசமாக சொதப்பியிருக்திறார். இதனால் பைனல் போட்டியில் ரோஹித்தின் பார்ம் மும்பை அணிக்கு பாதகமாக இருக்க வாய்ப்புள்ளது.

அடுத்து அணியின் திட்டம்.. மும்பை அணி எப்போதுமே தெளிவான திட்டங்களுடன் களத்திற்கு வரும். தேவையற்ற சோதனை முயற்சிகளை தவிர்த்தே வந்துள்ளது. டெல்லிக்கு எதிரான முதல் தகுதி சுற்று போட்டியின் போது கடந்தாண்டு சிஎஸ்கே அணிக்கு எதிராக பைனலில் விளையாடிய 9 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட அணிகள் தொடரின் இறுதி வரை யாரை எந்த இடத்தில் களமிறக்குவது என்கிற தெளிவான திட்டம் இல்லாமலேயே ஆடினர்.

இத்தனை பலம் மற்றும் சில பலவீனங்களுடன் இருக்கும் மும்பை அணியை டெல்லி கேப்பிடல்ஸ் ஐந்தாம் முறையாக கோப்பையை கைப்பற்ற அனுமதிக்குமா அல்லது மும்பையிடம் இருந்து கோப்பையை தட்டி பறிக்குமா என்பது இன்று தெரிந்துவிடும்.