துபாய் : கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் கடைசி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் வாய்ப்புகள் பெரும் அணிகளின் பட்டியலையே மொத்தமாக மாற்றியுள்ளது.
2020 ஐபிஎல் தொடரின் 50வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. சிஎஸ்கேவை பொறுத்தவரை இந்த போட்டி வெறும் சோதனை முயற்சிகள் மட்டுமே. ஆனால் கொல்கத்தாவுக்கு இது வாழ்வா சாவா மாதிரியான ஒரு போட்டி. ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்போடு வைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும் எனும் நிலைமை. இந்த நிலையில் தான் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பவுலிங் செய்ய முடிவெடுத்தார்.
நேற்றைய போட்டியில் சிஎஸ்கேவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தது. டு பிளசிஸ்க்கு பதில் மீண்டும் வாட்சன் சேர்க்கப்பட்டிருந்தார். இம்ரான் தாஹிருக்கு பதில் கரண் சர்மா உள்ளே வந்திருந்தார். முக்கியமான இந்த போட்டியில் கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே தாக்குதல் யுக்தியோடு ஆட்டத்தை தொடங்கினர். அதற்கேற்றாற் போல் சென்னையின் பந்துவீச்சை கொல்கத்தா அணியின் வீரர் நிதிஷ் ராணா வெளுத்து வாங்கினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் அவ்வப்போது வீழ்ந்து வந்தாலும் மறுபக்கம் நிதிஷ் ராணா மட்டும் நிலையாக ஆடி 61 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். பின்னர் நிதிஷ் ராணா விக்கெட் இழப்புக்கு பின்னர் கடைசி நேரத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் கொஞ்சம் அதிரடி காட்ட கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 172 ரன்கள் எடுத்தது .
பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன் வழக்கம் போல ஸ்பின் பவுலிங்கில் உடனே விக்கெட்டை பறிகொடுத்திருந்தாலும் ருத்ராஜ் இன்றைய போட்டியிலும் பொறுப்போடு விளையாடி தொடர்ந்து இரண்டாவது போட்டியாக அரைசதம் எடுத்து தன்னிடம் ஸ்பார்க் இல்லை என்ற தோனி மற்றும் சிஎஸ்கே நிர்வாகத்துக்கு திறமையின் மூலம் பதில் கொடுத்துள்ளார். ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ராயுடு நிலையான பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். ஆனால் ராயுடு விக்கெட்டை பறிகொடுத்த பிறகு சென்னை கொஞ்சம் தடுமாற தொடங்கியது. ருத்ராஜ் விக்கெட்டையும் இழந்த பிறகு இந்த முறையும் வெற்றி பெற வேண்டிய போட்டியில் சென்னை தோல்வியை சந்தித்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது.
ஆனால் இந்த முறை கேதர் ஜாதவ் களத்தில் இல்லை. மாறாக இந்த சீசனில் டெத் ஓவர்களில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் ஜடேஜா நின்று இருந்தார். இதனால் 19 வது ஓவரில் மட்டும் சென்னை அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பக்கம் சாம் கரன் தடுமாறிக்கொண்டிருந்தார். கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் வேண்டும் என்கிற நிலையில் ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். ஜடேஜா இந்த போட்டியில் 11 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்திருந்தார்.அதில் 3 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடக்கம்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் கொல்கத்தா அணி இனி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவது கடினம் ஆகியுள்ளது. மீதம் இருக்கும் ஒரே ஒரு போட்டியிலும் கொல்கத்தா அதிகப்படியான ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே இது சாத்தியம். ஆனால் அதற்கு பஞ்சாப், ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளும் இதே போல் 14 புள்ளிகள் மட்டுமே எடுக்க வேண்டும். அந்த அணிகள் மீதமிருக்கும் போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்றால் கொல்கத்தா அணியின் ப்ளே ஆஃப் கனவு பறிபோகும். புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்து கிட்டத்தட்ட ப்ளே ஆஃப் வாய்ப்பு கிடைக்க போகும் அணி என்கிற பட்டியலில் இருந்த கொல்கத்தாவின் நிலையை அப்படியே சிஎஸ்கே மாற்றியுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் வாய்ப்பு எந்த அணிக்கு கிடைக்க போகிறது யார் உள்ளே வருவது என்பதில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.