Saturday, March 25, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்சிஎஸ்கே இப்போதும் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.. எப்படி தெரியுமா ? இத பாருங்க புரியும்

சிஎஸ்கே இப்போதும் ப்ளே ஆஃப் செல்ல முடியும்.. எப்படி தெரியுமா ? இத பாருங்க புரியும்

துபாய் : இந்த ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு ஒரு கனவாக மாறியுள்ளது. அடுத்தடுத்த தோல்விகளால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் சென்னை அணிக்கு ப்ளே ஆஃப் செல்ல இன்னும் சில வாய்ப்புகள் உள்ளன. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 2020 ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த அணியும் அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழையவில்லை, அதே போல எந்த அணியும் மொத்தமாக வெளியேறவும் இல்லை.

புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் முதலில் டெல்லி அணி 10 போட்டிகளில் விளையாடியுள்ளது இது 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் உள்ளது. வலிமையான பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டரை வைத்துள்ள இந்த அணி மீதமுள்ள 4 போட்டியில் ஒன்றில் வெற்றி பெற்றாலே போதுமானது, ப்ளே ஆஃப்க்கு நுழைந்து விடலாம்.

[sharethis-follow-buttons]

இரண்டாவது இடத்தில் பெங்களூர் அணி இதுவும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளது இது 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் நெட் ரன்ரேட் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த ஐபிஎல்லில் சர்ப்ரைஸ் கொடுக்கும் அணிகளில் முக்கியமானது ஆர்சிபி அணி. இதுவும் இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலே போதுமானது.

மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ். இந்த அணியை எடுத்துக்கொண்டால் 9 போட்டிகளில் விளையாடி அதில் 6 போட்டியில் வெற்றியுடன் 12 புள்ளிகளுடன் உள்ளது. மீதமுள்ள ஐந்து போட்டியில் 2ல் வெற்றிபெறுவது மும்பைக்கு அத்தனை சவாலானதாக இருக்காது. அதில் முக்கியமாக சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளை தான் மும்பை குறிவைக்கும்.

இதுவரை சொன்ன மூன்று அணிகளும் கிட்டத்தட்ட எப்படியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு நுழைந்துவிடும் வாய்ப்பு மிக அதிகம். இப்போது மீதமுள்ள இந்த நான்காவது இடத்தை பிடிக்கப்போகும் அணி எது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

கொல்கத்தா அணியை எடுத்துக்கொண்டால் மதில்மேல் பூனை என்பது போல் தான் உள்ளது. தொடக்கத்தில் ஓரளவு சமாளித்து ஐந்து போட்டியில் வெற்றியுடன் நான்காம் இடத்துக்கும் முன்னேறினாலும் இரண்டாம் பாதியில் அந்த அணி சொதப்ப தொடங்கியுள்ளது. இதனால் கொல்கத்தா மீண்டுவந்து மீதமுள்ள 4 போட்டியில் 3 போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றுக்கு போவதை உறுதிசெய்ய முடியும். 2 போட்டிகளில் மட்டுமே வென்றால் அதுவும் அதிகப்படியான ரன்ரேட் அடிப்படையில் வெற்றிபெற வேண்டும்.

அடுத்து பஞ்சாப் அணி : இந்த ஐபிஎல் தொடரில் முதலில் வெளியேற போகும் அணி என்கிற நிலையில் இருந்து இப்போது ப்ளே ஆஃப் வரைக்கும் முன்னேறியுள்ளது. 10 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியுடன் இருக்கும் பஞ்சாப் அணி மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 3ல் வெற்றி பெற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் மேலும் 2 போட்டிகளில் தோல்வியடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் ப்ளே ஆஃப்க்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்த ஐபிஎல் சீசனில் கணிக்க முடியாத நிலையிலேயே உள்ளது . 10 போட்டிகளில் ஆடியுள்ள இந்த அணியும் 4 போட்டியில் வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. மீதமுள்ள 4 போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் அல்லது 3 போட்டியில் வெற்றி பெற்று மற்ற அணிகளுடன் ரன்ரேட் அடிப்படியில் மோதினால் மட்டுமே ராஜஸ்தான் அணிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த 2 சீசன்களிலும் மிகப்பெரிய அணிகளாக வலம்வந்த சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் தான் இந்த சீசனில் மோசமான நிலையில் உள்ளது. ஹைதராபாத் 9 போட்டிகளில் விளையாடி அதில் 3ல் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. மீதமுள்ள 5 போட்டியில் குறைந்தது 4ல் வெற்றிபெற வேண்டும் அதே நேரம் முன்னாள் இருக்க கூடிய கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய அணிகள் மற்ற அணிகளுடனான போட்டியில் குறைந்தது 2 போட்டிகளிலாவது தோல்வியை சந்திக்க வேண்டும்.

கடைசியாக தான் உள்ளது சிஎஸ்கே. இந்த ஐபிஎல்லின் பரிதாபத்திற்குரிய அணியாக மாறியுள்ளது. மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டர் சிஎஸ்கேவின் நிலையை கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் சிஎஸ்கேவுக்கு இறுதியாக ஒரு வாய்ப்பு எஞ்சியுள்ளது. 10 போட்டியில் வெறும் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் அந்த அணி மீதமுள்ள 4 போட்டியிலும் கண்டிப்பாக அதிக ரன்ரேட் அடிப்படையில் வெற்றிபெற வேண்டும் . அதேநேரம் மறுபக்கம் கொல்கத்தா, மீதமுள்ள நான்கில் இரண்டு போட்டியில் தோல்வியடைய வேண்டும் மீதமுள்ள இரண்டு போட்டியிலும் குறைந்த ரன்ரேட் அடிப்படையில் வெற்றிபெற வேண்டும்.

பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் குறைந்தது ஒரு போட்டியிலாவது தோல்வியடைந்தால் மட்டுமே சிஎஸ்கேவின் ப்ளே ஆஃப் கனவை புத்துணர்வோடு வைக்க முடியும் . முன்பே சொன்னது போல 2020 ஐபிஎல் தொடரில் இதுவரை எந்த அணியும் அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றுக்குள்ளும் நுழையவில்லை அதேபோல இதுவரை எந்த அணியும் அதிகாரபூர்வமாக வெளியேறவும் இல்லை.