அபுதாபி: 2020 ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியை சென்னை அணி வெற்றியோடு முடித்துள்ளது. கடைசி 4 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு பெற்ற இளம் வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
ப்ளே ஆஃப் வாய்ப்பை முழுவதுமாக இழந்த பிறகு கடைசி இடத்தை தவிர்க்கும் நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்றதுமே போட்டி சிஎஸ்கேவுக்கு சாதகமாக மாறிவிட்டது என்று கூறலாம். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி முதல் பவர்ப்ளே ஓவர்களில் மட்டுமே அதிரடியாக ஆடினர். அதன்பின்னர் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுக்க தொடங்கினர். இறுதியாக தீபக் ஹூடா மட்டுமே அதிரடியாக ரன்குவிப்பில் ஈடுபட்டார். இதனால் கடைசி நேரத்தில் பஞ்சாப் அணி மோசமான இலக்கை நிர்ணயிப்பதில் இருந்து தப்பியது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 153 ரன்கள் எடுத்தது .
அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் விக்கெட்டுகளை எடுப்பதில் பஞ்சாப் திணறியது. சில நேரங்களில் விக்கெட் எடுத்தாலும் அதுவும் மூன்றாவது நடுவரிடம் சென்று நாட் அவுட் ஆனது. இதனால் சென்னை அணியின் முதல் விக்கெட் எடுக்கவே 10 ஓவர்கள் வரை சென்றுவிட்டது. அதன் பின்னரும் பஞ்சாப் அணியால் சென்னையின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. ருத்ராஜ் கெய்க்வாட் தொடர்ந்து மூன்றாவது போட்டியாக அரைசதம் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரைசதம் எடுத்த முதல் சிஎஸ்கே வீரர் எனும் பெருமையை பெற்றார். நேற்றைய போட்டியில் ருத்ராஜ் 49 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இறுதியில் சென்னை அணி 18.5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 6 போட்டிகளில் வெற்றியோடு 12 புள்ளிகளுடன் பட்டியலில் 7 வது இடத்தில் நிறைவு செய்துள்ளது.
சென்னை அணியில் இந்த சீசனில்…
அதிக ரன்கள் எடுத்த வீரர் – டு பிளசிஸ் ( 449 ரன்கள் )
அதிக விக்கெட் எடுத்த வீரர் – சாம் கரன் ( 13 விக்கெட்டுகள் )
அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் – டு பிளசிஸ் (14 சிக்ஸர்கள் )
அதிக ஃபோர் அடித்த வீரர் – டு பிளசிஸ் ( 42 ஃபோர்)
அதிகப்படியான ஸ்ட்ரைக் ரேட் வைத்திருக்கும் வீரர் – ஜடேஜா ( 171.85)
அதிக கேட்ச் பிடித்த வீரர் – டு பிளசிஸ் ( 12 கேட்ச் )
சிறந்த பவுலிங் – சாம் கரன் ( 3/13 – பெங்களூருக்கு எதிரான போட்டியில் )
தனி நபருடைய அதிகாட்ச ஸ்கோர் – டு பிளசிஸ் ( 87 ரன்கள் – பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் )
அதிக டாட் பால் – தீபக் சாஹர் ( 118 டாட் பால் )
மிக நீளமான சிக்ஸர் – தோனி ( 102 மீட்டர் )