மகளிர் ஐ.பி.எல். இப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணியை மும்பை அணி வாரி சுருட்டி வீசி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அசத்தும் அமெலியா:
அந்த போட்டியில் 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய அமெலியா கெர் ஆடிய ஆட்டம் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு லேடி பொல்லார்ட்டை பார்த்து போலவே இருந்தது என்றே கூறலாம். ஏனென்றால் இறங்கியது முதலே விளாசினார். பவுண்டரிகளாக விளாசிய அவர் ஒரு சிக்ஸரையும் விளாசி ஸ்கோரை எகிற வைத்தார். அந்த போட்டியில் அமெலியா 24 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 45 ரன்கள் எடுத்தார்.
பேட்டிங்கில்தான் கலக்குகிறார் என்று பார்த்தால் பவுலிங்கிலும் அசத்தினார். 2 ஓவர்களே வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 1 ஓவர் மெய்டன் ஆகும். மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் அனைவரும் அதிகம் தேடுவது இந்த அமெலியாவின் பெயரைத்தான். யார் இந்த அமெலியா?
யார் இவர்?
அமெலியா கெர் ஒரு 2கே கிட். 2000ம் ஆண்டு அக்டோபர் 13-ந் தேதி நியூசிலாந்து நாட்டின் வெலிங்டனில் பிறந்தவர். தற்போது 23 வயதே ஆகும் அமெலியா வலது கை பேட்டிங்கிலும், வலது கை சுழற்பந்துவீச்சாளரும் ஆவார். அசகாய சூராங்கனையான அமெலியா 2016ம் ஆண்டு நவம்பர் 9-;் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அதே ஆண்டு டி20 போட்டியிலும் அறிமுகமானார்.
2018ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி நடைபெற்ற போட்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அமெலியாவை திரும்பி பார்க்க வைத்தது என்றே கூறலாம். அன்றைய தினம் நியூசிலாந்து – அயர்லாந்து அணிகள் ஒருநாள் போட்டியில் மோதின. அந்த போட்டியில் எமியுடன் ஆட்டத்தை அமெலியா கெர் தொடங்கினார். களமிறங்கியது முதல் மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பவுண்டரிக்கு விளாசுவதிலே அமெலியா குறியாக இருந்தார்.
இரட்டை சதம்
அமெலியாவை கட்டுப்படுத்தாமல் அயர்லாந்து வீராங்கனைகள் தடுமாறினார். எமி 61 ரன்களில் அவுட்டானாலும், அடுத்து வந்த காஸ்பெரேக்கும் அமெலியாவிற்கு ஒத்துழைப்பு அளித்தார். பவுண்டரிகளாக விளாசிக்கொண்டிருந்த அமெலியா சதமடித்தார். அவருடக்கு ஒத்துழைப்பு தந்த காஸ்பெரேக்கும் 113 ரன்கள் குவித்து அவுட்டானார். சதமடித்த பிறகும் வேகம் குறையாத அமெலியா தனது வேகத்தை மேலும் அதிகரித்தார். இதனால், நியூசிலாந்து ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. சதமடித்து சோதித்த அமெலியா இரட்டை சதம் அடித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இறுதிவரை அவுட்டாகாமல் அயர்லாந்து அணிக்கு பெரும் சோதனையை தந்த அமெலியாக 145 பந்துகளில் 31 பவுண்டரி 2 சிக்ஸருடன் 232 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த அபார சாதனையை படைக்கும்போது அவருக்கு வயது வெறும் 18. அந்த போட்டியில் 440 ரன்களை குவித்த நியூசிலாந்து 305 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது.
மாபெரும் சாதனை
அமெலியா தனது இரட்டை சதம் மூலம் 21 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமல் இருந்த ஒருநாள் போட்டியில் ஒரு வீராங்கனையின் தனிநபர் அதிகபட்சத்தை முறியடித்தார். இந்த சாதனையை படைக்கும்போது அமெலியாவிற்கு வெறும் 17 ஆண்டுகள் 243நாட்கள் மட்டுமே வயது ஆகியிருந்தது. ஆண்கள் கிரிக்கெட்டில் கூட இந்த சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை.
இரட்டை சதம் மட்டுமின்றி அந்த போட்டியில் 5 விக்கெட்டுகளையும் அமெலியா வீழ்த்தினார், இரட்டை சதம் மற்றும் 5 விக்கெட்டுகளை ஒருநாள் போட்டியில் எடுத்த ஒரே நபர் அமெலியா மட்டுமே. நியூசிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனையாக விளங்கும் அமெலியா 59 ஒருநாள் போட்டிகளில் ஆடி 2 சதம் 6 அரைசதத்துடன் 1362 ரன்களும், 59 டி20 போட்டிகளில் ஆடி 1 அரைசதத்துடன் 657 ரன்களும் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் 77 விக்கெட்டுகளும், டி20யில் 58 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக அமெலியா மாறியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ALSO READ | 12 இன்னிங்சா ஒரு ஃபிப்டி கூட இல்ல…! ரன்மெஷின் கோலி கம்பேக் தருவது எப்போது..?