மகளிர் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்திய அணி அரையிறுதியை உறுதி செய்யும் முக்கிய போட்டியில் அயர்லாந்து மகளிர் அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. இந்திய அணிக்காக ஆட்டத்தை தொடங்கிய ஷபாலி வர்மாவும், ஸ்மிரிதி மந்தனாவும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் இணைந்து அதிரடி காட்டியதால் இந்திய அணியின் ரன் சரசரவென ஏறியது. தொடக்கம் முதலே சற்று தடுமாறிய ஷபாலி வர்மா 24 ரன்களில் அவுட்டாகினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் 13 ரன்களில் அவுட்டாக ரிச்சா கோஷ் டக் அவுட்டானார்.
ஆனாலும் மறுமுனையில் ஸ்மிரிதி மந்தனா வெளுத்து வாங்கினார். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் வெளுத்த ஸ்மிரிதி மந்தனா அரைசதம் விளாசினார். அரைசதம் விளாசிய பிறகும் அவரது ஆட்டத்தில் அனல் பறந்தது. இதனால், 19வது ஓவரில் ஸ்மிரிதி மந்தனா 56 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 87 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து ஆடிய அயர்லாந்து அணி ஆட்டத்தின் முதல் ஓவரின் முதல் பந்திலே விக்கெட்டை பறிகொடுத்தது. அடுத்து களமிறங்கிய ஓர்லா அதே ஓவரில் போல்டானார். ஆனாலும், அந்த அணியின் கேபி லீவிஸ், லாரா டேலனி இணைந்து அதிரடியாக ஆடினார். ஆனால், அவர்களது ஆட்டத்திற்கு மழை வினையாக வந்தது.
8.2 ஓவர்களில் 54 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்த அயர்லாந்து அணி மேற்கொண்டு ஆடாத வகையில் தொடர்ந்து மழை பெய்தது. இதையடுத்து, டக்வொர்த லீவிஸ் விதிப்படி இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் அந்த அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இதனால், குரூப் பி பிரிவில் இங்கிலாந்து அணியும், இந்தியா அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி தன்னுடைய அரையிறுதிப் போட்டியில் வரும் 23-ந் தேதி கேப்டவுனில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இங்கிலாந்து அணி 24-ந் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
பலமிகுந்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி அரையிறுதியில் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.