இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளுக்கான ரசிகர்களின் எண்ணிக்கை உலக கிரிக்கெட் ரசிகர்களின் எண்ணிக்கையில் முக்கால்வாசி ஆகும். அந்த அளவிற்கு வெறிபிடித்த கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். இதனால், ஆண்டுதோறும் ஐ.பி.எல். போட்டிகளை ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர்.
ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டு வந்த ஐ.பி.எல். போட்டிகள் தற்போது பெண்களுக்கும் நடத்தப்பட உள்ளது. முதன்முறையாக நடப்பாண்டு முதல,மகளிர் ஐ.பி.எல். போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 2023ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எப்போது என்ற கேள்வி இருந்து வந்தது. தற்போது வரும் மார்ச் 4-ந் தேதி முதல் வரும் மார்ச் 26-ந் தேதி வரை முதல் சீசன் மகளிர் ஐ.பி.எல். நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் ஐ,பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் 13-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 1500 வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு அணியும் 15 முதல் 18 வீராங்கனைகளை மட்டுமே ஏலத்தில் எடுக்க முடியும். இதனால், 90 வீராங்கனைகள் மட்டுமே ஏலத்தில் விலைபோக வாய்ப்பு உள்ளது. மொத்தம் பங்கேற்கும் 5 அணிகளும் முதல் கோப்பையை கைப்பற்றுவதற்காக தரமான வீராங்கனைகளை அணியில் கொண்டு வர முயற்சிக்கும்.
டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்த பிறகு இந்த முதல் சீசன் மகளிர் ஐ.பி.எல். தொடங்குவதால் அதிரடி திருவிழா இந்தியாவிலும் தொடர உள்ளது. போட்டிகள் முழுவதும் மும்பை ப்ராபோர்ன் மைதானம் மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளது.
இனி வரும் காலங்களில் இந்த 5 அணிகள் என்பது அதிகரிக்கப்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. இப்போது முதல் ஏலத்தில் பங்கேற்க உள்ள அணிகள் தங்களது அணியை பலப்படுத்தும் முயற்சியில் களமிறங்கியுள்ளன. மும்பை அணி டி20 மற்றும் உலகக்கோப்பையை வென்ற இங்கிலாந்து முன்னாள் கேப்டன் எட்வர்ட்சை பயிற்சியாளராக நியமித்துள்ளது. இந்தியாவின் அசத்தல் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.