Monday, March 27, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்சிங்கப்பெண்ணே.. உலகக்கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி..!

சிங்கப்பெண்ணே.. உலகக்கோப்பையை கைப்பற்றி புதிய வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி..!

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு சமமாக இந்திய மகளிர் அணியும் கிரிக்கெட் போட்டிகளில் சமீபகாலமாக அசத்தி வருகிறது. சர்வதேச அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் முதன்முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பையை ஐ,சி.சி. நடத்தியது.

அபார பவுலிங்

இந்த தொடரில் இந்திய அணியில் அசத்தி வரும் ஷபாலி வர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கம் முதல் அபாரமாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, தென்னாப்பிரிக்காவின் போட்செப்ஸ்ட்ரூம் நகரில் உள்ள சென்வீஸ் பார்க் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, பேட்டிங்கைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியினர் கடும் நெருக்கடி அளித்தனர். போட்டியின் முதல் ஓவரிலே டிடாஸ் சாது தொடக்க வீராங்கனை ஹீப்பை டக் அவுட்டாகி வெளியேற்றினார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அதிரடியாக ஆடிய மற்றொரு வீராங்கனை நியாம்ஹ் ஹாலந்து 10 ரன்களில் அர்ச்சனா பந்தில் அவுட்டானார்.

அசத்தல்

பின்னர், கேப்டன் கிரேஸ் 4 ரன்களின் அர்ச்சனா பந்தில் வெளியேற அந்த அணி 16 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து வந்த விக்கெட் கீப்பர் செரீன் ஸ்மேல் 3 ரன்களிலும், சாரீஸ் பாவ்லே 2 ரன்களிலும் ஆட்டமிழக்க பார்ட்னர்ஷிப் அமக்க முயன்ற ரைனா 19 ரன்களில் அவுட்டானார். அவருக்கு ஒத்துழைப்பு அளித்த அலெக்ஸா 11 ரன்களில் அவுட்டாக கடைசி கட்டத்தில் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. கடைசியில் சோபியா மட்டும் 2 பவுண்டரிகள் விளாச 17.1 ஓவர்களிலே இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்திய அணியில் டிடாஸ் சாது, அர்ச்சனா சாது, பர்ஷவி சோப்ரா தலா 2 விக்கெட்டுகளையும், காஷ்யப், ஷபாலி வர்மா, சோனம் யாதவ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார், பந்துவீசிய 6 வீராங்கனைகளும் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

உலக சாம்பியன்

இதையடுத்து,69 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பை என்று களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஷபாலி வர்மா அதிரடி தொடக்கம் அளித்தார். அவர் 11 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்தபோது அவுட்டானார். பின்னர், 20 ரன்களை இந்தியா தொட்டிருந்தபோது மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்வேதா 5 ரன்களில் அவுட்டாக, அடுத்து சௌமியா – கோங்கடி திரிஷா கூட்டணி அபாரமாக ஆடியது. இருவரும் இணைந்து நிதானமாக ஆடி வெற்றியை உறுதி செய்தனர். இந்தியா வெற்றிக்கு அருகில் வந்தபோது திரிஷா போல்டானார். 66 ரன்கள் எடுத்தபோது அவர் 29 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். ஆனாலும், செளமியா இலக்கை எட்டவைத்து இந்திய மகளிர் அணியை வரலாறு படைக்க வைத்தார். சௌமியா 37 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஹிரிஷ்தாவும் ரன் ஏதுமின்றி களத்தில் இருந்தார்.
இதன்மூலம் இந்திய மகளிர் அணி 19 வயதுக்குட்பட்டோருக்கான முதல் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது. வெற்றி பெற்ற மகளிர் அணிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.