இந்திய கிரிக்கெட் அணிக்காக ஆடிய ஒவ்வொரு வீரர்களும் தனிச்சிறப்புமிக்கவர்கள். ஆனால், ஒவ்வொரு காலத்திற்கும் நாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் சில வீரர்கள் இருப்பார்கள், அவ்வாறு 90ஸ் கிட்ஸ்கள் நினைவு தெரிந்த காலகட்டத்தில் சச்சின், பின்னர் தோனி, அவருக்கு பின்பு விராட்கோலி என்று சொல்லலாம். மூன்று பேரும் ஒரே அணியில் ஆடினாலும் மூவரும் அணிக்குள் வந்த காலம் என்பது சுமார் 8-10 ஆண்டுகள் இடைவெளி ஆகும்.
இந்திய அணியின் தூண்களாக விளங்கும் விராட்கோலி மற்றும் ரோகித்சர்மா இருவரும் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இளம் இந்திய அணி கட்டமைக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு கட்டமைக்கப்படும் அணியில் ஒரு தனித்துவமான வீரராக தெரிபவர் சுப்மன்கில். நிச்சயம் இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால வரலாற்றை எழுதுபவர் சுப்மன்கில்லாகவே இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்.
நவீன டி20 கிரிக்கெட் ஆட்டம் வந்த பிறகு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என்று வித்தியாசம் தெரியாத வகையில் மூன்று வகையிலான போட்டியிலும் பேட்டை சுழற்றுவதிலே இன்றைய வீரர்கள் குறியாக உள்ளனர். விராட்கோலி மட்டும்தான் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விவேகம், நிதானம் மற்றும் வேகத்தை மாறி, மாறி காட்டி மற்ற வீரர்களுக்கு உதாரணமாக உள்ளார்.
தற்போதுள்ள இந்திய அணியில் விராட்கோலியிடம் காணப்பட்ட அந்த ஆட்டத்தை நிதானமாக தொடங்கி பின்பு களத்தில் நங்கூரமிட்டு இறுதியில் அதகளம் செய்யும் பாணி சுப்மன்கில்லிடம் காணப்படுகிறது. சிறந்த பேட்ஸ்மேனுக்கு இது மிகவும் முக்கியம். இதன் காரணமாகவே ஒருநாள் போட்டியில் அவரால் மிக இளம் வயதிலேயே இரட்டை சதம் விளாச முடிந்தது. அதுமட்டுமில்லாமல் சுப்மன்கில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டி என மூன்று வடிவ போட்டியிலும் சிறப்பாக ஆடி வருகிறார்.
இந்திய அணிக்குள் வரும்போது அனைத்து வீரர்களுக்கும் இருப்பது போல தொடக்க கால தடுமாற்றம் சுப்மன்கில்லிடம் இருந்தாலும், குஜராத் அணிக்காக ஐ.பி.எல். அணியில் ஆடிய பிறகு அவரது பேட்டிங் ஸ்டைலையே மொத்தமாக மாறியுள்ளது என்றே கூறலாம். அனைத்தையும் விட ஒரு வீரருக்கு தேவை தொடர்ச்சியான நிலையான பேட்டிங் திறன். சமீபகாலமாக ஆடும் இந்திய அணியில் சீனியர் வீரர்கள் தவிர இளம் வீரர்களிடம் சூர்யகுமார் யாதவிடம் மட்டுமே அதை காண முடிகிறது. அவருக்கு அடுத்தபடியாக, கடந்தாண்டு இறுதி முதல் இந்தாண்டு தொடக்கத்திலும் சுப்மன்கில்லிடம் அதை காண முடிகிறது.
இது அவருக்கு மட்டுமின்றி இந்திய அணிக்கும் ஆரோக்கியமானது. சுப்மன்கில் வருங்காலத்திலும் மிகப்பெரிய வெற்றியை குவிக்க வாழ்த்துகள்.