இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 17ம் தேதி தொடங்க உள்ள நிலையில் இப்போதே போட்டிகள் குறித்த சர்ச்சைகள் தொடங்கிவிட்டது. பயிற்சி போட்டிகளில் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து காயமடைவதும், மறுபக்கம் இந்திய அணியில் ரோஹித் சர்மா விளையாடுவாரா யார் பவிளையாடும் அணியில் இடம் பெற போவது என்கிற சர்ச்சைகளும் இப்போதே தொடங்கிவிட்டன. பொதுவாக கிரிக்கெட் போட்டிகளில் ஸ்லெட்ஜிங் செய்வது என்பது இயல்பு தான் ஆனால் அது தனிநபர் தாக்குதலாக மாறாத வரை தான். இந்தியா ஆஸ்திரேலியா இடையே டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே இதுவரை ஏற்பட்ட பிரபலமான சர்ச்சைகள் குறித்து பார்க்கலாம்.
2008 சிட்னி தொடர்:
2008 ஆம் ஆண்டு இந்திய ஆஸ்திரேலியா தொடரின் போது ஏற்பட்ட சர்ச்சை இன்றளவும் பிரபலம். அந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணி 1-0 பின் தங்கியிருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு எல்லாம் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. ஆனால் உணவு இடைவேளைக்கு பிறகு நடுவர்கள் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நடுவர்கள் ஸ்டீவ் பக்னர் மற்றும் மார்க் பென்சன் இவர்களுடன் மூன்றாவது நடுவர் புரூஸ் ஆக்ஸன்போர்டு ஆகியோர் ஒன்பது தவறான தீர்ப்பு வழங்கியதாக கூறப்பட்டது. அதில் முக்கியமாக சைமண்ட்ஸ் 30 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மா பவுலிங்கில் விக்கெட்டை பறிகொடுக்க வேண்டிய உருவானது. ஆனால் நடுவர் ஸ்டீவ் பக்னர்அவுட் கொடுக்கவில்லை. ரீப்ளே செய்து பார்த்ததில் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. இருப்பினும் அவுட் வழங்கப்படாததால் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க வேண்டிய சைமண்ட்ஸ் 162 ரன்கள் குவித்தார். அதன்பிறகு முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 463 ரன்கள் குவித்ததும் குறிப்பிடத்தக்கது.
மறக்க முடியாத ஹர்பஜன் -ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மோதல்:
அதே 2008 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரில் ஹர்பஜன் -ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் இடையே ஏற்பட்ட மோதல் பெரிய விவாத பொருளாக மாறியது. அந்த வருடம் முழுவதுமே ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவான அணியாக வலம் வந்தது. மேலும் முதல்தர அணிகளை எல்லாம் வீழ்த்தி தன்னை ஜாம்பவானாக காட்ட ஆஸ்திரேலிய அணி முயன்றுகொண்டு இருந்த தருணம். இந்திய அணியும் ராகுல் டிராவிட், கங்குலி, அணில் கும்ப்ளே, சச்சின் என்று வலுவாக இருந்த சமயம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த தொடரில் இந்திய அணி 532 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சச்சின் 154 ரன்களும், விவிஎஸ் லக்ஷ்மன்-109 ரன்களும், கங்குலி-67, ஹர்பஜன்-63 ரன்களும் எடுத்து அசத்தினர். ஆரம்பத்தில் இந்திய அணி 345/7 என்கிற இடத்தில் தடுமாறிக்கொண்டு இருந்தது.
ஆனால் ஆஸ்திரேலிய அணியே எதிர்பார்க்காமல் எட்டாவது விக்கெட்டில் ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்தது. அது ஹர்பஜன் மற்றும் சச்சின் ஜோடி. இவர்களின் பார்ட்னர்ஷிப்பை பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி திணறியது. அவர்கள் என்ன செய்தும் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியவில்லை. அப்போது தான் அவர்களுடைய வழக்கமான ஸ்லெட்ஜிங்கை தொடங்கினர். ஆனால் இம்முறை அது விபரீதமானது. சைமண்ட்ஸ் ஹர்பஜன் சிங்கை சீண்டிய போது கோபமடைந்த ஹர்பஜன் சைமண்ட்சை இன ரீதியாக திட்டியதாக புகார் எழுந்தது. இதற்காக ஹர்பஜன் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டதும் பின்னர் அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக அந்த தடையை விலக்கி கொண்டதும் வரலாறு.
கம்பீர் – வாட்சன் மோதல் 2008 :
இந்த முறை ஆஸ்திரேலிய அணி இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதில் மூன்றாவது டெஸ்ட் தொடர் நடைபெறும் போதுதான் இந்த மோதல் நிகழ்ந்தது. ஏற்கனவே இந்திய அணி அந்த தொடரில் 1-0 எனும் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதனால் மூன்றாவது போட்டியை தோல்வியில் இருந்து எப்படியாவது தவிர்க்க வேண்டிய கட்டாயத்தில் ஆஸ்திரேலிய அணி இருந்தது. இந்திய அணியில் கவுதம் கம்பீர் தன்னுடைய வாழ்நாளின் சிறந்த பார்மில் அப்போது தான் இருந்தார். இந்திய அணி 157/3 என்கிற நிலையில் இருந்த போது நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கம்பீர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் நிதானமாக ஆடினார்.
இவர்கள் பார்ட்னர்ஷிப்பை உடைக்க தடுமாறிய ஆஸ்திரேலிய அணி வாட்சனை பயன்படுத்தியது. அப்போது வாட்சன் பந்துவீசும் போதெல்லாம் கம்பீரை தூண்டிவிடும் வகையில் நடந்துகொண்டார். சில சமயம் கைகளால் ஏதோ செய்கை கட்டுவது போலவும் நடந்துகொண்டார். அதில் உச்சமாக கம்பீர் முதல் ரன் ஓடிவிட்டு இரண்டாவது ரன் எடுக்க ஓடும் பொழுது இடையே போய் நின்றுகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த கம்பீர் வாட்சனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த மோதல் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்குள் உடனடியாக சக வீரர்கள் மற்றும் நடுவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும் அந்த போட்டியில் இந்திய அணி 613 ரன்கள் குவித்தது. ஆனால் மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்ததால் நான்காவது போட்டியில் வென்று இந்தியா அந்த தொடரை கைப்பற்றியது.
விராட் கோலி – மிச்செல் ஜான்சன் வார்த்தை மோதல் 2014:
இது தோனியின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது நடைபெற்றது. அந்த தொடரில் ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி 2-0 எனும் கணக்கில் முன்னிலையில் இருந்தனர். இதனால் இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை தக்கவைக்க முடியும் என்கிற நிலையில் இந்திய அணி விளையாடியது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஸ்டீவ் ஸ்மித்தின் 194 ரன்களுடன் 530 ரன்கள் குவித்தது. இரண்டாம் நாள் தேநீர் இடைவேளைக்கு பிறகு இந்திய அணி ஆட்டத்தை தொடங்கியது.
இரண்டாம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்த இந்திய அணி மூன்றாம் நாளில் 39 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டை பறிகொடுத்து 147/3 என்கிற நிலையில் இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த விராட் கோலி – ரஹானே நான்காவது விக்கெட்டுக்கு 252 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தனர். வழக்கம் போல இவர்களின் கூட்டணியை உடைக்கவும் ஆஸ்திரேலிய வீரர்கள் பல ஸ்லெட்ஜிங் முறைகளை பயன்படுத்தினர். அதில் முக்கியமாக ஜான்சன் ஸ்டெம்பை நோக்கி எறிந்த பந்து விராட் கோலி மீது பட்டது. இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஜான்சன் அதற்காக களத்திலேயே மன்னிப்பும் கேட்டார். ஆனால் அதன் பின்னர் விராட் கோலி தன்னுடைய பேட்டால் அதற்கு பதில் சொன்னார். அந்த போட்டியில் கோலி 169 ரன்கள் குவித்து அசத்தினார்.
டிராவிட்-ஸ்லேட்டர்-சச்சின் வார்த்தை மோதல் 2001:
கிரிக்கெட் உலகின் ராஜாவாக ஆஸ்திரேலிய அணி கோலோச்சிய காலம் அது. இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட், ஒருநாள் என நீண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. மூன்று போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 எனும் நிலையில் பின்தங்கி இருந்து 2-1 எனும் கணக்கில் உலகின் நம்பர் ஒன் அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது எல்லாம் கிரிக்கெட் ரசிகர்களின் மறக்க முடியாத நிகழ்வுகள். இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் அந்த மோதல் ஏற்பட்டது. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணி 349 ரன்கள் எடுத்து முன்னிலையில் இருந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய இந்திய அணி 57 ரன்களில் 2விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பின்னர் டிராவிட் மற்றும் சச்சின் இணை இந்திய அணியை மீட்டது.
அப்போது 103 ரன்களை எடுத்திருந்த பொழுது டிராவிட் அடித்த பந்து நேராக ஸ்லேட்டர் அருகே சென்று தரையில் பட்டு கைக்கு சென்றது. ஆனால் ஸ்லேட்டர் அது அவுட் என்பதில் உறுதியாக இருந்தார். குழப்பத்தில் நடுவர் அதனை சோதனை செய்ததில் அவுட் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் கோபம் கொண்டனர். ஸ்லேட்டர் உடனே நேராக டிராவிட்டிடம் சென்று அவரை சீண்டும் வகையில் கோபமாக ஏதோ சொன்னார். பின்னர் சச்சினிடமும் அதே போல பேசினார். ஆனால் நிலைமை மோசமாவதற்குள் தடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஸ்லேட்டர் அதற்கு மன்னிப்பும் கேட்டார்.
இந்த நிகழ்வு குறித்து ஸ்லேட்டர் கூறும்பொழுது, ராகுல் டிராவிட்டிடம் ஸ்லெட்ஜிங் செய்தது என்பது என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய தவறு. நான் அவரை சீண்டும் போதும் கூட அவர் தன்னுடைய பொறுமையை இழக்கவில்லை. அதன் பிறகு தனி ஆளாக அவர் உலகின் சிறந்த அணியை மொத்தமாக நொறுக்கிவிட்டார். அந்த கோபம் என்னிடம் வெளிப்பட்ட போது நான் ஒரு விலங்கு போலவும் அவர் ஒரு பண்பானவர் போன்றும் உணர்ந்தேன். அவர் என்னுடைய இதயத்தை வென்றுவிட்டார் என்று கூறினார்.