நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய அணி மோதும் கடைசி ஒருநாள் போட்டி இன்று இந்தூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட் செய்த இந்திய கேப்டன் ரோகித்சர்மா – சுப்மன்கில் இருவரும் ஆட்டத்தை தொடங்கினர்.
30வது சதம்:
போட்டி தொடங்கியது முதல் இந்திய கேப்டன் ரோகித்சர்மா – சுப்மன்கில் இருவரும் அதிரடியாக ஆடினர். இருவரும் இணைந்து அதிரடியாக ஆடினர். குறிப்பாக, 3 ஆண்டுகளாக சதமடிக்காத ரோகித்சர்மா பவுண்டரிகளாகவும், சிக்ஸர்களாகவும் விளாசினர். பவர்ப்ளேயில் இருவரும் இணைந்து அதிரடியாக ஆடியதால் அணியின் ஸ்கோர் மளமளவென எகிறியது.
கடந்த சில போட்டிகளாக அதிரடியாக ஆடி ரன்களை குவித்தாலும் விரைவாக ஆட்டமிழந்த ரோகித்சர்மா இன்றைய போட்டியில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 3 ஆண்டுகளாக சதமடிக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு ரோகித்சர்மா இன்று முற்றுப்புள்ளி வைத்தார். ரோகித்சர்மா தன்னுடைய அபாரமான பேட்டிங்கில் சதமடித்து ஒருநாள் போட்டியில் 30வது சதத்தை பதிவு செய்தார்.
ஜெயசூர்யா, ரிக்கிபாண்டிங் சாதனை:
இதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த ரிக்கிபாண்டிங் மற்றும் ஜெயசூர்யா இருவரின் சாதனையையும் ரோகித்சர்மா சத சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் ஒருநாள் போட்டிகளில் தலா 30 சதங்களை விளாசியுள்ளனர். ரோகித்சர்மா கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி தான் ஒருநாள் போட்டிகளில் முதன் முறையாக தொடக்க வீரராக களமிறங்கினார்.
அவர் தொடக்க வீரராக களமிறங்கி நேற்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
11ம் ஆண்டு:
11வது ஆண்டில் தொடக்க வீரராக அடியெடுத்து வைக்கும் ரோகித்சர்மா சதத்துடன் தொடங்கியிருப்பது அவருக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. ஒருநாள் போட்டி உலகக்கோப்பைக்கு முன்பு ரோகித்சர்மா ஃபார்முக்கு திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.