இந்திய ஆஸ்திரேலிய இடையே அகமதாபாத் டெஸ்ட் போட்டி டிராவை நோக்கி சென்றாலும், இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஒரே காரணம் விராட்கோலி மட்டுமே. இந்திய கிரிக்கெட் அணியில் எத்தனையோ ஜாம்பவான்கள் இருந்தாலும் ஜாம்பவான்களுக்கு எல்லாம் ஜாம்பவான்களாக சிலர் மட்டுமே ஒவ்வொரு காலத்திற்கும் திகழ்வார்கள்.
கபில்தேவ் அவருக்கு பிறகு சச்சின், சச்சினுக்கு பிறகு தோனி, தோனிக்கு பிறகு விராட்கோலி. இவர்களில் காட் ஆஃப் கிரிக்கெட் சச்சினை சாதனைகளை எல்லாம் முறியடித்து வரும் விராட்கோலி(ViratKohli) இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி உலக கிரிக்கெட்டிலும் ஒரு தவிர்க்க முடியாத வரலாறு. நான்காவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1204 நாட்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் போட்டியில் 2 சதங்களுக்கு இடையே அதிக இடைவெளி எடுத்துக்கொண்ட வீரர்களின் பட்டியலை கீழே காணலாம்.
வார்ரன் பார்ட்ஸ்லீ – 5093 நாட்கள்
டெஸ்ட் போட்டிகளிலே முதன்முறையாக தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் இங்கிலாந்தைச் சேர்ந்த வாரன் பார்ட்ஸ்லீ. 1909-1910-ம் ஆண்டிலே இந்த அரிய சாதனையை படைத்தவர். 1912ம் ஆண்டு அடுத்த 2 சதங்களை டெஸ்டில் விளாசினார். ஆனால், இவர் அடுத்த சதத்தை அதாவது 6 சதத்தை விளாச கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். துல்லியமாக 5093 நாட்களுக்கு பிறகு தன்னுடைய கடைசி மற்றும் 6வது சதத்தை விளாசினார். முதல் உலகப்போர் காரணமாக 8 ஆண்டுகள் அவர் கிரிக்கெட் ஆடவில்லை. இதுவே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரர் 2 சதங்களுக்கு இடையே எடுத்துக்கொண்ட அதிக இடைவெளி ஆகும்.
சையத் முஷ்டாக் அலி – 4544 நாட்கள்
இந்திய அணியின் பழம்பெரும் கிரிக்கெட் வீரரான சையத் முஷ்டாக் அலி. வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியில் சதமடித்த முதல் வீரர். இவர் 1936ம் ஆண்டு மான்செஸ்டரில் அடித்த சதத்திற்கு (112) ரன்களுக்கு பிறகு, அடுத்த சதம் அடிக்க 13 ஆண்டுகள் தேவைப்பட்டது. அதாவது, 4544 நாட்களுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஈடன் கார்டன் மைதானத்தில் அடுத்த சதத்தை விளாசினார். இவரது சத இடைவெளிக்கு இரண்டாம் உலகப்போர் ஒரு காரணமாக அமைந்தது.
பாவத் ஆலம் – 4188 நாட்கள்
பாகிஸ்தான் அணியின் முக்கிய வீரர் பாவத் ஆலம். 2009ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அறிமுக டெஸ்ட் போட்டியிலே சதமடித்து அட்டகாசமாக தனது வாழ்வை தொடங்கியவர். ஆனால், அவரது அடுத்த டெஸ்ட் சதம் 2020ம் ஆண்டில்தான் வந்தது. சுமார் 11 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்தார். அதாவது 4188 நாட்கள் இடைவெளிக்கு பிறகு பாவத் ஆலம் இந்த சதத்தை விளாசினார்.
ப்ராங்க் ஊலி – 4007 நாட்கள்
இங்கிலாந்திற்காக 1910 முதல் 20 காலகட்டத்தில் கிரிக்கெட் ஆடியவர் ப்ராங்க் ஊலி. இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை விளாசினார். ஆனால், அவர் தன்னுடைய அடுத்த டெஸ்ட் சதத்திற்கு 11 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். 2வது சதத்திற்கு 3வது மற்றும் 4வது சதத்தை 9 இன்னிங்ஸ் இடைவெளியில் விளாசினார். ஆனால்,5வது சதத்தை விளாச அவருக்கு 5 ஆண்டுகள் தேவைப்பட்டது.
உபுல் தரங்கா:
இலங்கை அணியின் முக்கிய வீரராக விளங்கியவர் உபுல்தரங்கா. 2006ம் ஆண்டு வங்காளதேச அணிக்கு எதிராக தன் முதல் டெஸ்ட் சதத்தை விளாசினார். சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகே அடுத்த சதத்தை விளாசினார். அதாவது 3 ஆயிரத்து 888 நாட்களுக்கு பிறகு 2016ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அடுத்த சதத்தை விளாசினார்.
மேலே கூறியவர்கள்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சதத்திற்கும், அடுத்த சதத்திற்கும் அதிக இடைவெளி எடுத்துக்கொண்ட வீரர்கள்.