இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ.பி.எல். என்பது ஒரு தனித்திருவிழாவே ஆகும். ஐ.பி.எல். தொடர் நாளை மறுநாள் குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. ஒவ்வொரு ஐ.பி.எல். தொடரின்போதும் ஒவ்வொரு அணியின்மீதும் எதிர்பார்ப்பு என்பது இருந்து கொண்டே இருக்கும்.
அந்த வகையில் நடப்பு ஐ.பி.எல். தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அணி என்றால் அது பெங்களூர் அணிதான். பெங்களூர் அணியின் மீது இந்த சீசன் மட்டுமின்றி, கடந்த சில ஆண்டுகளாகவே எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏனென்றால், அது அந்த எதிர்பார்ப்பிற்கு ஒற்றை காரணம் விராட்கோலி மட்டுமே ஆகும்.
அதிக ரசிகர்களை கொண்ட சென்னை மற்றும் மும்பை அணி ஏற்கனவே கோப்பைகளை சரமாரியாக வென்றுவிட்டது. ஆனால், பெங்களூர் அணிக்கு மட்டும் அது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. சென்னை அணியின் கேப்டன் தோனி மற்றும் மும்பை கேப்டன் ரோகித்சர்மா ஆகியோர்கூட வேறு அணிகளுக்காக ஆடியுள்ளனர்.
ஆனால், ஐ.பி.எல், தொடர் அறிமுகப்படுத்தியது முதல் நடப்பு சீசன் வரை பெங்களூர் அணிக்காக மட்டுமே ஆடி வரும் வீரர் விராட்கோலி. இதில் 2014ம் ஆண்டு முதல் பெங்களூர் அணிக்காக கேப்டன் பொறுப்பையும் ஏற்று கடந்த 2021ம் ஆண்டு வரை கேப்டனாக ஆடினார். கேப்டனாக கோப்பையை கைப்பற்றவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு விராட்கோலி மீது வைக்கப்பட்டாலும், ஐ.பி.எல், தொடரிலும் கிங்காகவே வலம் வருகிறார் விராட்கோலி.
ஒரே சீசனில் அதிக சதங்கள், ஒரே சீசனில் அதிக ரன்கள் என்று விராட்கோலி படைத்த சாதனைகள் அபாரமானவை. ஐ.பி.எல். கோப்பையை தோனியும், ரோகித்சர்மாவும் கைகளில் ஏந்தி நின்றதை பார்த்து ரசித்த அவர்களின் ரசிகர்களுமே விராட்கோலி ஒரு முறையாவது ஐ.பி.எல், கோப்பையை தனது கைகளில் ஏந்தி நிற்க மாட்டாரா? என்று ஏக்கப்பட்டிருப்பார்கள். ஏனென்றால், விராட்கோலி இந்திய அணிக்காக படைத்த சாதனைகளும், இந்திய அணியை தனி ஆளாக வெற்றி பெற வைத்த போட்டிகளும் கணக்கில் அடங்காதவை.
அப்பேற்பட்ட சாதனைகளை படைத்த விராட்கோலிக்கு ஐ.பி.எல். கோப்பை 15 சீசன்களாக கைக்கு மட்டும் எட்டவில்லை. கிட்டத்தட்ட தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் உள்ள விராட்கோலிக்கு ஐ.பி.எல். கோப்பையை வென்று அவரது கையில் தருவதே அவர் படைத்த சாதனைகளுக்கு மகுடமாக அமையும். ராஜாங்கம் இல்லாத ராஜா என்ற அவர் மீதான விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி கிட்டும்.
டுப்ளிசிஸ் தலைமையிலான படையினர் விராட்கோலி கைகளில் மகுடத்தை ஏந்தி தருவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ALSO READ | அடேங்கப்பா..! ஒரு சதம் அடிக்குறதுக்கு இவ்ளோ வருஷம் தேவைப்பட்டுச்சா..?