ஐ.பி.எல். தொடரில் கடந்த சீசனில்தான் அறிமுகமானாலும் சிம்ம சொப்பன அணிகளுக்கே சிம்ம சொப்பனமாக உலா வருகிறது குஜராத் டைட்டன்ஸ். பல நெருக்கடியான தருணங்களில் தோல்வி கட்டாயம் என்ற போட்டியில்கூட அந்த அணி அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த குஜராத் அணிக்கு தூண் போல நின்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 ரன்களை குவித்து வெற்றியை பெற்றுத்தந்துள்ளார் சாய்சுதர்சன். இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் இந்த சாய்சுதர்சன்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய்சுதர்சன் கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி பிறந்தவர். 22 வயதே ஆன சாய்சுதர்சன் இடது கை பேட்ஸ்மேன் ஆவார். தமிழ்நாட்டு அளவில் நடைபெற்ற தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ் அணிக்காக அவர் ஆடிய ஆட்டம் ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெறச் செய்யும் அளவிற்கு மிகச்சிறப்பாக அமைந்தது. மேலும், தமிழ்நாடு அணிக்காக ஆடக்கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
இதன்மூலம் கடந்த சீசனில் புதிய அணியாக அறிமுகமான குஜராத் மூலமாக அறிமுக வீரராக ஐ.பி.எல். தொடரில் அடியெடுத்து வைத்தார். கடந்த சீசனிலே கவனிக்கத்தக்க ஆட்டத்தை வௌிப்படுத்தினார். இருப்பினும்., டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தன்னால் ஒரு பினிஷராக ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து தர முடியும் என்று நிரூபித்துள்ளார். ஒரு நடப்பு சாம்பியன் அணியின் ஒன் டவுன் வீரராக களமிறங்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பது என்பது சவாலான விஷயம். அதை இன்று நிரூபித்து ஒன்-டவுன் ப்ளேயருக்கு தகுதியானவார் என்பதை நிரூபித்துள்ளார் சுதர்சன்.
சாய் சுதர்சன் இதுவரை 7 முதல் தர போட்டிகளில் ஆடி 2 சதம் 1 அரைசதம் உள்பட 572 ரன்களையும், 11 லிஸ்ட் ஏ போட்டியில் ஆடி 3 சதம், 2 அரைசதம் உள்பட 664 ரன்களையும், 19 டி20 போட்டிகளில் ஆடி 2 அரைசதம் உள்பட 519 ரன்களை குவித்துள்ளார். சஹா 14 ரன்னிலும், சுப்மன்கில் 14 ரன்னிலும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்னிலும் அவுட்டான நிலையில் மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கருடன் நிதானமாக ஜோடி சேர்ந்து பொறுமையுடன் ஆடினார்.
ரன்ரேட் சீராக இருந்ததால் இருவரும் ஓரிரு ரன்களாகவும், அவ்வப்போது பவுண்டரிகளாகவும் சேர்த்தனர். விஜய் சங்கர் அவுட்டான பிறகு அதிரடிக்கு மாறிய சாய் சுதர்சன் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடைசியில் மில்லர் 16 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்ஸரை பறக்கவிட குஜராத் 2 ஓவர் மீதம் வைத்தே வென்றது. குஜராத் அணியின் இந்த வெற்றி முழுக்க முழுக்க சாய் சுதர்சன் என்ற தமிழருக்கும், விஜய் சங்கர் என்ற தமிழருக்குமே சேரும்.
இருவரும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் போட்டிகளிலும் சாய் சுதர்சன் ஜொலிப்பார் என்று நம்பலாம். விஜய்சங்கரும் அதிரடியில் மிரட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ALSO READ | ஜெயிச்சுட்ட மாறா..! விடுதலை எனும் முழக்கத்தால் வெற்றி பெற்ற வெற்றிமாறன்..!