Wednesday, May 31, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்என்னதான் ஆச்சு மும்பைக்கு..? தோல்வியில் துவளும் பல்தான்ஸ்…!

என்னதான் ஆச்சு மும்பைக்கு..? தோல்வியில் துவளும் பல்தான்ஸ்…!

ஐ.பி.எல். தொடரிலே அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமைக்குரிய அணி மும்பை இந்தியன்ஸ். சாம்பியன் பட்டங்களை 5 முறை வாங்கி முதலிடத்தில் உள்ளது. ஆனால், ஐ.பி.எல். ஏலம் நடத்தப்பட்டு புதிய பட்டாளத்துடன் கடந்த சீசன் முதல் களமிறங்கிய மும்பை அணிக்கு சோதனை மேல் சோதனை என்றே சொல்லலாம்.

கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்த மும்பை அணி இந்த முறை தங்களது ஆஸ்தான பந்துவீச்சாளர் பும்ரா இல்லாமல்தான் களமிறங்கியுள்ளது. மற்ற வீரர்களை வைத்து சமாளித்துவிடலாம் என்று ரசிகர்கள் நினைத்தால் மும்பையின் நிலைமை பரிதாபமாக மாறிக்கொண்டே இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக முதல் போட்டியில் வென்றதே இல்லை என்ற வரலாற்றை இந்தாண்டும் படைத்த மும்பை அணி சென்னை அணிக்கு எதிராக இன்று தோல்வி அடைந்து தனது ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்தது.

மும்பை அணி பவர்ப்ளேவில் ஆடிய ஆட்டத்தை பார்த்தபோது அவர்கள் 200 ரன்களை நெருங்குவார்கள் என்று தெரிந்தது. ஆனால், ஒரு கட்டத்தில் அவர்கள் ஆடிய ஆட்டம் 140 ரன்களை எடுப்பார்களா? என்று ரசிகர்களை ஏக்கமடைய வைத்தது. ரித்திக் கடைசியில் அதிரடி காட்டியதால் 157 ரன்களை எடுத்தது.

சொந்த மைதானத்தில் 158 ரன்கள் என்பது ஓரளவு வெற்றி பெற உதவும் ரன்தான். ஆனால், மும்பை மைதானத்தையே சொந்தமாக கொண்ட ரஹானேவிடம் மும்பை சிக்கிக்கொண்டது என்பதே உண்மை. குறிப்பாக, அர்ஷத்கானை ரஹானே வதம் செய்துவிட்டார். ஒரே ஓவரில் 1 சிக்ஸர் 4 பவுண்டரிகள் விளாசி ஆட்டத்தை முழுவதும் சென்னை வசம் கொண்டு சென்றுவிட்டார். பெஹண்ட்ரூப், கிரீன், சாவ்லா என எந்த பந்துவீச்சாளரும் மும்பையின் தடுப்பாட்டத்திற்கு இன்று உதவவில்லை.

மும்பை அணி ஆடும் ஆட்டத்தை பார்க்கும்போது மன உறுதி, போராடும் குணம் என மும்பைக்கே உரித்தான பல விஷயங்கள் மிஸ் ஆகிறது. குறிப்பாக, சென்னை அணிக்கு எதிராக வெறியுடன் ஆடும் மும்பை அணி கடந்த சீசன் முதலாகவே காணவில்லை. நிச்சயம் மும்பை அணியின் இந்த குறைகளை உடனே களையாவிட்டால் மும்பை அணியின் நிலை இனி வரும் போட்டிகள் மட்டுமின்றி இனி வரும் சீசன்களிலும் கவலைக்குரிய வகையில் ஆகும் அபாயம் உள்ளது.

ALSO READ | ஐ.பி.எல்.லில் அசத்தும் இளம் பாலகர்கள்..! பாக்கவே சூப்பரா இருக்கு..!