Wednesday, May 31, 2023
Homeவிளையாட்டுகிரிக்கெட்என்னதான் ஆச்சு நம்ம சென்னைக்கு..? தோனி படையையே வீழ்த்திய இளம் சிங்கங்கள்..!

என்னதான் ஆச்சு நம்ம சென்னைக்கு..? தோனி படையையே வீழ்த்திய இளம் சிங்கங்கள்..!

16வது ஐ.பி.எல். தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது. நடப்பு சாம்பியன் குஜராத் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் நேருக்கு நேர் மோதின. நீண்ட இடைவெளிக்கு பிறகு தோனியை களத்தில் காண ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

இந்த தொடரில் சென்னை அணியில் தோனி, ருதுராஜ் ,ஜடேஜா. மொயின் அலி, ராயுடு ஆகியோருடன் கான்வே, ஸ்டோக்ஸ் ஆகியோரும் களமிறங்கினர்.

நீண்ட இடைவெளிக்கு விருந்து வைக்கும் வகையில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடினார். பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய அவர் 92 ரன்களை குவித்தார். இதில் 9 சிக்ஸர், 4 பவுண்டரி அடங்கும். கடைசி கட்டத்தில் தோனி 7 பந்துகளில் 1 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 14 ரன்கள் விளாசினார். வயதானாலும் சிங்கம், சிங்கம்தான் என்பது போல தோனி ஆட்டம் இருந்தது. 178 ரன்களை குவித்த சென்னை அணி 179 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு சஹா, சுப்மன்கில் அருமையான தொடக்கம் அளித்தனர். இருவரும் இணைந்து 37 ரன்களை எட்டியபோது சஹா 16 பந்தில் 25 ரன்களுடன் அவுட்டானார். அடுத்து வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் 22 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்களிலும் அவுட்டானார். மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனாலும், நங்கூரமிட்ட சுப்மன்கில் அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 63 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் ரஷீத்கான் அதிரடியால் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது. ரஷீத்கான் 3 பந்துகளில் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் 10 ரன்கள் எடுத்து வெற்றி பெறவைத்தார். ஐ.பி.எல். தொடரில் அனைத்து அணிகளுக்குமே சிம்ம சொப்பனமாக விளங்கும் அணி சென்னை.

குறைந்த இலக்கை மட்டுமே வைத்துக்கொண்டு இமாலய பேட்டிங் வரிசையையும் சரிய வைக்கும் ஆற்றல் கொண்ட அணி என்பதை சென்னை நிரூபித்துள்ளது. பல்வேறு பெருமைகளை கொண்ட சென்னை அணிக்கு குஜராத் அணியுடனான போட்டி மட்டும் மறக்க வேண்டியதாகவே அமைகிறது. குஜராத்துடன் ஆடிய 3 போட்டிகளிலும் தோல்வியையே சென்னை பதிவு செய்துள்ளது.

சென்னை அணியின் துருப்புச்சீட்டாக கருதப்பட்ட தேஷ்பாண்டே பவுலிங்கில் குஜராத் விளாசித்தள்ளியது. ஜடேஜா, தீபக்சாஹர், ராஜ்வர்தன், சான்டர் ஓரளவு நன்றாக வீசினாலும் வெற்றிக்கு உதவவில்லை. அடுத்த போட்டியில் சென்னை அணி அத்தனை தோல்விக்கும் பதிலடி தருமா? என்று எதிர்பார்க்கலாம்,

சென்னை அணியுடன் ஒப்பிடும்போது குஜராத் வீரர்கள் அனைவரும் அனுபவத்திலும், வயதிலும் மிகவும் சிறியவர்கள். வில்லியம்சன், ரஷீத்கான் இருவருக்கு மட்டுமே நல்ல அனுபவம் உள்ளது. மற்றவர்கள் சிறுவர்கள் என்றே சொல்லாலம். ஆனாலும், சிறியவர்கள் படை பெரியவர்கள் படையை வீழ்த்திவிட்டது என்றே சொல்லலாம்.