சிட்னி: நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்த நிலையில் சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 11 டி20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வந்தது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இந்திய அணி பறிகொடுத்திருக்கும் நிலையில் டி20 தொடரில் எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. முதல் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. அதன் பின்னர் சிட்னியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த டி20 தொடரை 2-0 எனும் கணக்கில் தொடரை கைப்பற்றி இருந்தது. ஆனால் இந்தியாவின் வெற்றி பயணம் தொடர வேண்டுமானால் மூன்றாவது டி20 போட்டியிலும் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்ய வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமல் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் கடைசி போட்டியில் தடுமாற 12 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை 2-1 என்கிற கணக்கில் முடித்து வைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் தொடர் டி20 போட்டிகளின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன்பு தொடர்ந்து 9 போட்டிகளில் தோல்வியை சந்திக்கவில்லை. அதில் ஒரு போட்டியில் மட்டும் முடிவுகள் எட்டப்பட வில்லை. இந்த வெற்றி பயணம் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடராக இருந்தாலும் இந்திய அணி முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் வெற்றி பெற்று அந்த தொடரை கைப்பற்றி இருந்தது. இடையில் இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளதால் மூன்றாவது போட்டியில் இருந்து இந்த வெற்றி கணக்கு தொடங்கியது.
அதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி தொடங்கிய இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் மட்டும் முடிவுகள் எட்டப்படவில்லை. அதை தொடர்ந்து அதே மாதம் 24ம் தேதி தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான மிக நீண்ட டி20 தொடரில் இந்திய அணி பங்கேற்றது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 5-0 என்கிற கணக்கில் தொடரை கைப்பற்றி நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்தது. இந்த தொடரில் மூன்று மற்றும் நான்காவது போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று இந்திய அணி வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டு ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருந்த காரணத்தினால் இந்திய அணி தொடர்ந்து பல்வேறு டி20 போட்டிகளில் பங்கேற்று வந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக டி20 உலக கோப்பை தொடர் அடுத்தாண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் இந்திய அணியின் வெற்றி பயணம் தொடர்ந்துகொண்டே தான் இருந்தது. இந்த நிலையில் தான் பிப்ரவரி மாதம் நியூசிலாந்து தொடர் முடிவடைந்த பிறகு கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் வென்று 11 போட்டிகளில் தொடர்ச்சியாக கைப்பற்றி இருந்தது. ஆனால் மூன்றாவது டி20 போட்டியில் தோல்வி அடைந்துள்ளதால் இப்போது அந்த வெற்றி பயணத்திற்கு ஆஸ்திரேலிய அணியால் தடை போடப்பட்டுள்ளது.
இருந்த போதிலும் இந்திய அணி கடைசியாக நடைபெற்ற 7 டி20 தொடர்களை கைப்பற்றியுள்ளது. கடைசியாக 2018 -19 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் தோல்வியை சந்தித்துள்ளது, அதன் பிறகு நடைபெற்ற எல்லா டி20 தொடர்களையும் இந்திய அணி தான் தொடரை வென்றுள்ளது. இருப்பினும் ஐபிஎல் தொடர்களை கணக்கில் எடுத்துக்கொண்டு குறைந்த ஓவர்கள் தொடரில் விராட் கோலியின் கேப்டன்சி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றி தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு மீண்டும் ஒரு முறை பதிலடி கொடுத்துவிட்டார் கேப்டன் விராட் கோலி .